Published : 11 Nov 2015 12:04 PM
Last Updated : 11 Nov 2015 12:04 PM

சுனந்தா மரணத்துக்கு கதிர்வீச்சு காரணமில்லை: அமெரிக்க அறிக்கையால் புதிய திருப்பம்

முன்னாள் அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணத்துக்கு கதிர்வீச்சு வேதிப்பொருள் காரணமாக இருக்க முடியாது என அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ அறிக்கை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் அமெரிக்கா இந்த ஆய்வறிக்கையை அனுப்பியிருக்கிறது. அதில், சுனந்தா உடலில் காணப்பட்ட கதிர்வீச்சு வேதிப்பொருள் பொலோனியத்தின் அளவு அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய அளவில் இல்லை என தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும், அமெரிக்க ஆய்வறிக்கையை இந்திய தடயவியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழு ஆய்வு செய்த பிறகு, அதன் விவரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளத்தைச் சேர்ந்த சசி தரூரும் காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தா புஷ்கரும் கடந்த 2010 ஆகஸ்ட் 22-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இது இருவருக்குமே மூன்றாவது திருமணம்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு 2013-ம் ஆண்டில் அப்போது மத்திய இணை அமைச்சராக இருந்த சசி தரூருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் நிருபர் மெஹர் தராருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக சமூக வலை தளங்களில் சுனந்தா புஷ்கர் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார். டெல்லியில் நிருபர்களை சந்தித்து சில உண்மைகளை சொல்ல இருப்பதாகவும் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் 2013 ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில் டெல்லி போலீஸார் மர்ம மரணமாக வழக்கு பதிவு செய்தது. மருத்துவ அறிக்கையின்படி, சுனந்தாவுக்கு 'பொலோனியம் 210' என்ற பயங்கரமான வேதிப்பொருள் கலந்த விஷம் அளிக்கப் பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.

இந்நிலையில், சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானது அல்ல எய்ம்ஸ் மருத்துவமனையும் அறிவித்தது. இதனையடுத்து சுனந்தாவின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட சில தடயங்கள் சோதனைக்காக அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. உளவு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன. அது தொடர்பான அறிக்கையை டெல்லி போலீசாருக்கு எஃப்பிஐ அனுப்பி உள்ளது. நேற்று மாலை (செவ்வாய்க்கிழமை) இமெயில் மூலம் ஆய்வறிக்கை டெல்லி போலீஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், கதிர்வீச்சு பாதிப்பு காரணமாக சுனந்தா மரணம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x