Last Updated : 20 Jan, 2021 01:34 PM

 

Published : 20 Jan 2021 01:34 PM
Last Updated : 20 Jan 2021 01:34 PM

விவசாயிகள் போராட்டம்; பிரதமரின் மவுனத்துக்குக் காரணம் புரிதல் குறைவு: ராகுல் காந்தி விமர்சனம்

விவசாயிகளின் போராட்டத்தில், பிரதமரின் மவுனத்திற்குக் காரணம் அடிப்படை புரிதல் குறைவு என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவிக்கும் பிரதமர், விவசாயிகள் போராட்டத்திற்கு மவுனமாக இருப்பதற்குக் காரணம் அவருக்கு சில அடிப்படையான விஷயங்கள் பற்றிய புரிதல் குறைவு என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

இரு வாரங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தபோது, ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுவந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ''வாஷிங்டன் டிசியில் நடக்கும் வன்முறையையும், கலவரத்தையும் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அமெரிக்கத் தேர்தலுக்குப் பின் அதிகாரம் அமைதியான முறையில் மாற்றம் செய்யப்பட்டு தொடர வேண்டும். சட்டவிரோதப் போராட்டங்கள், எதிர்ப்புகள் மூலம் ஜனநாயகச் செயல்முறையைத் தகர்ப்பதை அனுமதிக்க முடியாது'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமரின் இக்கருத்தை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மூன்று மத்திய வேளாண் சட்டங்கள் குறித்த சிறு புத்தகத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

அப்போது, நாடாளுமன்றத் தாக்குதல் குறித்தும், விவசாயிகள் போராட்டம் குறித்தும் பிரதமரின் எதிர்வினை பற்றியும் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்து ராகுல் காந்தி கூறியதாவது:

"பிரதமர் 'இஸ் பார் ட்ரம்ப் சர்க்கார்' என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. நாட்டின் பிரதமராக நீங்கள் அப்படி எதுவும் செய்யக் கூடாது. ஏனெனில், நீங்கள் அமெரிக்க மக்களை அவமதிக்கிறீர்கள். இது அவர்களின் விருப்பம். உங்களுடையது அல்ல. இப்போது, ​​நிச்சயமாக, ட்ரம்ப் தோற்றார்.

ஆனால், விவசாயிகள் போராட்டம் குறித்துத் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறீர்கள். காரணம், தங்களுக்கு அடிப்படையான விஷயங்களைப் புரிந்து கொள்வதில் குறைபாடு உள்ளது.

வேளாண் சட்டங்கள் இந்திய விவசாயத்தை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. நாட்டைச் சூழ்ந்துவரும் இந்த சோகம் குறித்து மக்களுக்குத் தவறான தகவல்களை வழங்கவே அரசாங்கம் விரும்புகிறது. ஆனால், உண்மையில் அதைவிடப் பெரிய சோகம் என்னவென்றால் இந்தியா இப்போது 4-5 பேருக்குச் சொந்தமானது என்பதுதான்''.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x