Published : 15 Oct 2015 10:57 AM
Last Updated : 15 Oct 2015 10:57 AM

மதவாதத்தை விவாதிக்க நாடு இன்னும் தயாராகவில்லை: நிர்மலா சீதாராமன்

"எழுத்தாளர்கள் போராட்டம் பிரச்சினைகளுக்கு விடை அளிப்பதைக் காட்டிலும் அதிகமான கேள்விகளையே எழுப்புகிறது."

மதவாதம் மீது நியாயமான, சுதந்திரமான விவாதத்துக்கு இந்த தேசம் இன்னும் தயாராகவில்லை என்பதையே தாத்ரி சம்பவம் உணர்த்துவதாக மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளை எழுத்தாளர்கள் திருப்பி அளிப்பதும் பிரச்சினைகளுக்கு விடை அளிப்பதைக் காட்டிலும் அதிகமான கேள்விகளையே எழுப்புவதாக அவர் கூறியுள்ளார்.

தாத்ரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "மதவாதம் சம்பந்தப்பட்ட பிரச்சினை எழும்போதெல்லாம், அது குறித்த நியாயமான பேச்சுவார்த்தை தொடங்கும் முன்னரே நிறைய விவகாரங்கள் கிளம்பிவிடுகின்றன. பாஜக-வின் கொள்கை குறித்து ஏகத்துக்கும் விமர்சிக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் அதே நிலைதான். பாஜக தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் குரல் எழுப்பக்கூட அனுமதி அளிக்கப்படுவதில்லை.

பிரச்சினை பொதுவெளிக்கு வரும் முன்னரே வலுக்கட்டாயமாக பாஜக தன்னை தற்காத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறது. மதவாதம், மத வன்முறைகள் தொடர்பான விவகாரங்கள் மீது நியாயமான, வெளிப்படையான விவாதத்தை இந்த தேசம் இன்னமும் ஆதரிக்கவில்லை என்பது அவமானப்பட வேண்டிய விஷயம்.

ஒரு மாநிலப் பிரச்சினையில் மத்திய அரசை குறை கூறுவது என்பது சம்பந்தப்பட்ட மாநிலம் அப்பிரச்சினைக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்க மறுக்கிறது என்றே அர்த்தம்.

எனவேதான் மதவாத பிரச்சினைகள் எழும்போதெல்லாம் மத்திய அரசை எளிதாக சாடிவருகின்றனர். பாஜகவின் நிலைப்பாடு என்னவென்பதை கேட்க யாரும் செவி சாய்க்க தயாராக இல்லை.

மத்திய அரசை எதற்காக குறைகூற வேண்டுமோ, அதற்காக மட்டுமே குறை கூறுங்கள். அதைவிடுத்து மாநில பிரச்சினைகளுக்கும் பிரதமரே பதிலளிக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். பிரதமர் பதிலளிக்கும் நிர்பந்தத்துக்கு தள்ளுவது, இந்த தேசம் நாய்களிடம் சென்று கொண்டிருக்கிறது என்றெல்லாம் ஓலமிடுவது பிரச்சினைகளை திசை திருப்பும் செயலாகும்" என்றார் நிர்மலா சீதாராமன்.

தாத்ரி சம்பவம் குறித்து கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மாவின் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிர்மலா, "என் அமைச்சரவை சகா ஒருவர் அவரது தொகுதியில் நடைபெறும் பிரச்சினையில் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை நான் நிர்ணயிக்க முடியாது. மேலும், இத்தகைய விவகாரங்கள் குறித்து ஒரு சிலர் மட்டுமே கருத்து தெரிவித்துவிட முடியாது. தங்களது கருத்துகளை மட்டுமே தெரிவித்துக் கொண்டிருக்கும் நபர்கள், அடுத்தவர்கள் வாதிடவே வாய்ப்பளிக்காமல் இருப்பது எவ்வகையில் நியாயம்" என்றார்.

"எந்தப் பிரச்சினை நடந்தாலும் எதிர்க்கட்சிகள் எங்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை சுமத்தி விட்டு, பல்வேறு கதைகளையும் ஏற்கெனவே பரப்பி விட்டு வெறும் 'கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்' என்ற தொனியில் எங்களை விவாதத்தை எதிர்கொள்ளச் செய்கிறது.

இதற்கு ஒரு சான்றளிக்க வேண்டும் என்றால், கேரளாவில் ஒரு பேராசிரியரின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் நடந்தது. அவர் தேர்வு வினாத்தாளில் எழுப்பிய கேள்வி பிடிக்காததால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் செய்த காரியம் அது. ஆனால், அச்சம்பவம் குறித்து எத்தனை விவாதங்கள் எழுந்தன என்று யாராவது சொல்ல முடியுமா? மதவாத சம்பவங்களுக்கு எதிரான விவாதமெல்லாம் ஒரு சிலராலேயே பெரிதாக்கப்படுகிறது.

சாகித்ய அகாடமி விருதுகளை பலரும் திருப்பி அளித்து வருகின்றனரே. என் கேள்வி எல்லாம், விருதை திருப்பி அளித்து போராடும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறதுதானே? அதேபோல், அவர்களது பேச்சுரிமைக்கு எவ்வித தடையும் இல்லையே? அவர்கள் குரல் நசுக்கப்படுகிறதா என்பதற்கு அவர்களே பதில் சொல்லட்டும்.

கல்புர்கி கொல்லப்பட்டது கர்நாடகத்தில். அங்கு ஆளுங்கட்சி காங்கிரஸ். தாத்ரி சம்பவம் நடந்தது உத்தரப் பிரதேசத்தில். அங்கு ஆட்சி செலுத்துவது சமாஜ்வாதி கட்சி. அப்படியிருக்க நாட்டின் எந்தப் பகுதியில் என்ன பிரச்சினை நடந்தாலும் அதற்கு மத்திய அரசை கண்டித்து அறிவுஜீவிகள் போராட்டம் நடத்தினால், மாநில அரசுகளுக்கு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இருக்கும் பொறுப்பு மறுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

எழுத்தாளர்கள் போராட்டம் நடத்த அனைத்து உரிமையும் இருக்கிறது. அவர்களது போராட்டம் மூலம் எங்களுக்கான செய்தி வந்துவிட்டது. ஆனால், அவர்கள் தங்களது போராட்டத்தை வெகு நேர்த்தியாக பொருத்தியுள்ளனர்" என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x