Last Updated : 08 Oct, 2015 09:49 AM

 

Published : 08 Oct 2015 09:49 AM
Last Updated : 08 Oct 2015 09:49 AM

பெங்களூரு பலாத்கார வழக்கில் கைதானவர்களுக்கு போலீஸ் காவல்

பெங்களூருவில் 23 வயது இளம்பெண் ஓடும் வேனில் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்கள் 2 பேரை 14 நாட்கள் காவலில் விசாரிக்க காவல் துறைக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3-ம் தேதி இரவு பொம்மனஹள்ளியில் உள்ள தனது தோழியை சந்தித்துவிட்டு இரவு 9 மணிக்கு மடிவாளாவில் உள்ள தங்கும் விடுதிக்கு செல்வதற்காக காத்திருந்தார்.

இரவு 10.30 மணியளவில் வந்த வேனில் மடிவாளா செல்வதற்காக அந்த பெண் ஏறியுள்ளார். அடுத்தடுத்த நிறுத்தங்களில் அனைத்து பயணிகளும் இறங்கிவிட ஓட்டுநரும், அவரது நண்பரும் மட்டுமே வேனில் இருந்துள்ளனர். அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, ஆள்நடமாட்டம் இல்லாத பெல்லந்தூர் ஏரி அருகே அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளன‌ர். இளம்பெண் கூச்சல் எழுப்பியதால் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் மயங்கிய நிலையில் இருந்த‌வரை நள்ளிரவு மடிவாளா அய்யப்பன் கோயில் அருகே இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை விசாரிக்க பெங்களூரு மாநகர கூடுதல் காவல் ஆணையர் ஹரிசேகரன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில் ஹெச்.எஸ்.ஆர். லே அவுட்டை சேர்ந்த ஓட்டுநர்கள் யோகேஷ் (27), சுனில் (23) ஆகிய இருவரும் பாலியல் பலாத்காரம் செய்தது கண்டறியப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று பெங்களூரு மாநகர 6-வது அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் 14 நாட்கள் காவலில் விசாரிக்க காவல் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

போராட்டம்

பலாத்கார சம்பவத்தை கண்டித்து ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மடிவாளா, ஒயிட் ஃபீல்ட், மாரத்த ஹள்ளி ஆகிய பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கர்நாடக மகளிர் அமைப்பி னர், மனித உரிமை அமைப்பினர், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x