Published : 10 Jan 2021 03:28 AM
Last Updated : 10 Jan 2021 03:28 AM

மனித குலத்தை காப்பாற்ற 2 தடுப்பூசிகள் தயார்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தகவல்

புதுடெல்லி

கரோனா தடுப்பூசிகள் மூலம் மனிதகுலத்தை காப்பாற்ற இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாக நேற்று அவர் பேசியதாவது:

உலகம் முழுவதும் வாழும்இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் இந்தியர்கள் தங்களது அடையாளத்தை நிலைநாட்டி வருகின்றனர். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிக்காக பி.எம்.கேர்ஸ் நிதிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாராளமாக நிதியுதவி வழங்கினர். உங்களது பங்களிப்பால் நாட்டின் சுகாதார துறை சேவைகள் மேம்பட்டுள்ளன.

உலகின் பல்வேறு மூலைகளில் நாம் வாழ்ந்தாலும் இணையம் வாயிலாக இணைந்துள்ளோம். நமது உள்ளம் பாரத மாதாவுடன் ஒன்றிணைந்துள்ளது.உலகளாவிய அளவில் தேநீர் முதல்ஜவுளி வரை பல்வேறு துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு இருக்கிறது. மருத்துவ துறையிலும் இந்தியா சிறப்பாக சேவையாற்றி வருகிறது.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை இந்தியா திறம்பட நடத்தி வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியாவின் திறனை பார்த்து உலக நாடுகள் வியந்தன. கரோனா வைரஸ் பரவலின் தொடக்கத்தில் பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள், சோதனை கருவிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தோம். இவை அனைத்தும் இப்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. முழுமையானதன்னிறைவை எட்டியுள்ளோம்.

உலகளாவிய அளவில் நமது நாட்டில் கரோனா வைரஸ் உயிரிழப்பு மிகவும் குறைவாக உள்ளது. இப்போது இந்தியாவில் 2 கரோனா தடுப்பூசிகள் உற்பத்திசெய்யப்படுகின்றன. இந்த தடுப்பூசிகள் மூலம் மனித குலத்தை காப்பாற்ற இந்தியா தயாராக உள்ளது.

இந்திய கரோனா தடுப்பூசிகள்எப்போது கிடைக்கும் என்று உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதோடு மட்டுமன்றி, உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா எப்படி செயல்படுத்தப்படுத்தப் போகிறது என்பதை அறிந்து கொள்ளவும் உலக நாடுகள் ஆவலாக உள்ளன.

இந்தியாவில் ஊழலை ஒழிக்கதொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதன் ஒரு பகுதியாக நேரடி மானிய திட்டம் திறம்பட செயல்படுத்தப்படுகிறது. மக்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. தீவிரவாதத்தை இந்தியா துணிவுடன் எதிர்கொண்டு வருகிறது. இதன்மூலம் உலகமும் தீவிரவாத சவாலை எதிர்கொள்ளும் துணிவைப் பெற்றது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

விண்வெளி முதல் அனைத்து துறைகளிலும் இந்தியர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் தங்களது உழைப்பால், அறிவால் உலகத்துக்கு வழிகாட்டியாக விளங்குகின்றனர். உலகளாவிய அளவில் எழும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்தியாவில் எளிய முறையில் தீர்வு காணப்படுகிறது.

உலகின் எந்த மூலைக்கு நீங்கள் சென்றாலும் அங்கு இந்திய மக்களை காணலாம். உலக நாடுகள் முழுவதிலும் இந்திய உணவு வகைகள் கிடைக்கின்றன. இந்திய குடும்ப உறவு முறை மெச்சிப் பேசப்படுகிறது. இந்திய கலாச்சாரம் போற்றிப் புகழப்படுகிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்தியாவின் புகழை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றனர். அவர்களுக்கு பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி தனது உரைகளில் பலமுறை திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். இந்த வரிசையில் வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் அவர் மீண்டும் திருக்குறளை சுட்டிக் காட்டினார்.

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

நாடென்ப நாட்டின் தலை

என்ற திருக்குறளை பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார். எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யும் அளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும் என்பது இந்தக் குறளின் பொருள்.

குறளின் அர்த்தத்தை பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் விவரித்து கூறினார். உலகின் இக்கட்டான நேரத்தில் இந்தியாவும், இந்தியர்களும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உதவி செய்வார்கள் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார். உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் கர்வம் கொள்ள வேண்டும் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x