Published : 04 Jun 2014 10:00 AM
Last Updated : 04 Jun 2014 10:00 AM

முண்டே உடலுக்கு குடியரசு துணைத்தலைவர், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி அஞ்சலி- பிற கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்தினர்

டெல்லியின் பாரதிய ஜனதா அலுவலகத்தில் வைக்கப்பட்ட மத்திய கிராம வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டேவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இங்குள்ள அசோகா சாலையில் உள்ள அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் 12.30 மணி முதல் 2.15 வரை முண்டேவின் உடல் தலைவர்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு சுமார் 12.40-க்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, முண்டேவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். குடியரசு துணைத்தலைவர் ஹாமீது அன்சாரியும் பாஜக அலுவலகம் வந்து முண்டேவுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இங்கு முண்டேவின் உடல் கொண்டு வருவதற்கு சற்று முன்னதாக வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு படையினர், பாஜக அலுவலகம் முழுவதும் சோதனை செய்து பாதுப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்காக பாஜக அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு ஒரே ஒரு கதவு வழியாக தலைவர்கள் மற்றும் முக்கிய கட்சி பிரமுகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு முண்டேவின் உடலைக் கொண்டு வரும் முன்பே முதல் நபராக ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் தலைவர் மோகன் பாகவத் வந்து காத்திருந்து அஞ்சலி செலுத்தினார். இவருடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணைத் தலைவரான பையாஜி ஜோஷி, விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி, விஜய் கோயல் உட்பட பலரும், மத்திய அமைச்சர்களான வெங்கய்யா நாயுடு, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அனந்த் குமார், நிர்மலா சீத்தாராமன், பொன்.இராதாகிருஷ்ணன், ஸ்மிருதி இரானி உட்பட பலர் பாஜகவின் அலுவலகம் வந்து அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அத்துல் அஞ்சான், பிஜு ஜனதா தளத்தின் எம்பியான ஜெய பாண்டே ஆகியோரும் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்.

மகாராஷ்டிராவில் முக்கிய தலைவரை இழந்தது பாஜக

மத்திய கிராம வளர்ச்சித்துறை அமைச்சரான 62 வயது கோபிநாத் முண்டேவின் மரணம், மகராஷ்டிராவில் பாரதிய ஜனதாவிற்கு ஈடுகட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தி இருப்பதாகக் கருதப்படுகிறது.

டிசம்பர் 12, 1949-ல் பிறந்த கோபிநாத் முண்டேவை, நரேந்தர மோடி தன் அரசின் கிராமத்து தலைவர்களில் முக்கியமானவராகக் கருதி வந்தார். மகராஷ்டிராவின் முக்கியப் பகுதியான மராத்தாவின் பீட் தொகுதி எம்பியான முண்டே, அம் மாவட்டத்தின் பர்லி தாலுக்காவின் பர்லி வைஜிநாத் எனும் கிராமத்தை சேர்ந்தவர். முதல் முறையாக ஒரு மத்திய அமைச்சர் பதவியை ஏற்ற முண்டே, நம் நாட்டின் கிராமங்களை நவீனப்படுத்தும் திட்டங்களை வைத்திருந்தாராம்.

இதே பகுதியைச் சேர்ந்த பாஜகவின் மற்றொரு முன்னாள் தலைவரான பிரமோத் மஹாஜனின் மைத்துனரான முண்டே, அவரால் ஜனசங்கம் என்ற பெயரில் பாஜக இருந்த காலத்தில் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இவர், தன் சொந்த சகோதரரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின் மஹாஜனின் குடும்பத்தின் காப்பாளராக இருந்து வந்தார். பிறகு, மகராஷ்டிராவில் தேசிய ஜனநாயக முண்ணனி ஆட்சியில் 1995 முதல் 1999 வரை அதன் துணை முதல் அமைச்சராக இருந்தவர், தேசிய அரசியலுக்கு மாறினார்.

இவருக்கு மனைவியுடன் பங்கஜா, பிரீத்தம் மற்றும் யஷஸ்ஸ்ரீ என மூன்று மகள்கள் உள்ளனர். இதில், மருத்துவர் மற்றும் தொழிலதிபரான பால்வேவை மணந்த பங்கஜா, பீட் மாவட்டத்தின் பர்லி சட்டசபை தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இரண்டாவது மகள் மருத்துவமும், மூன்றாவது மகள் சட்டமும் பயின்று வருகிறார்.

அடுத்து வர இருக்கும் மகராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கட்சி அவரை, முதல் அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த திட்டமிடப்பட்டிருந்ததாகக் கருதப்படுகிறது. இதனால், பிரமோத் மஹாஜனை போல் முண்டேவின் மரணமும் பாஜகவிற்கு ஒரு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x