Published : 04 Jan 2021 02:36 PM
Last Updated : 04 Jan 2021 02:36 PM

பெருமைக்குரிய தருணம்: டிஎஸ்பி மகளுக்கு சல்யூட் செய்த காவல் ஆய்வாளர்

போலீஸ் டிஎஸ்பியாக இருக்கும் மகள் பிரசாந்திக்கு சல்யூட் செய்து வரவேற்ற காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர்: படம் உதவி | ட்விட்டர்.

திருப்பதி

கண்ணில் நீர் ததும்ப, மனதில் மகிழ்ச்சி நிரம்ப, காவல்துறையில் இருக்கும் தனது டிஸ்பி மகளுக்கு காவல் ஆய்வாளராக இருக்கும் தந்தை சல்யூட் செய்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பதி சந்திரகிரி கல்யாணி டேம் பகுதியில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியில் இருப்பவர் ஒய்.ஷியாம் சுந்தர். இவரின் மகள் ஜெஸி பிரசாந்தி குண்டூர் மாவட்டத்தில் காவல் உதவிக் கண்காணிப்பாளராகப் பணியில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், காவல்துறை சார்பில் திருப்பதியில் உள்ள காவல் பயிற்சி மையத்தில் நேற்று ஓர் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜெஸி பிரசாந்தி சீருடையில் வந்திருந்தார். பல்வேறு தரப்பு அதிகாரிகளை வரவேற்கும் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர், தனது மகள் பிரசாந்தி சீருடையில் வந்துள்ளதைப் பார்த்து சல்யூட் அடித்து வரவேற்றார்.

மகள் டிஎஸ்பி அந்தஸ்தில் இருக்கும்போது, காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் இருக்கும் தந்தை ஷியாம் சுந்தர் கண்ணீர் மல்க, மனதில் பெருமையுடன், புன்னகையுடன் சல்யூட் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சல்யூட் அடித்து தந்தை அளித்த வரவேற்பை டிஸ்பி பிரசாந்தி புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.

தந்தையும் மகளும் புன்னகையுடன் சல்யூட் செய்த சம்பவத்தை ஆந்திரக் காவல்துறை புகைப்படம் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுப் பெருமைப்பட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு பேட்ச் டிஎஸ்பி அதிகாரி பிரசாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தந்தை சல்யூட் செய்தது குறித்து டிஎஸ்பி பிரசாந்தி கூறுகையில், “நான் அரசுப் பணியில் சிவில் சர்வீஸ் தேர்வில் ஐஏஎஸ் அதிகாரியாக அமர வேண்டும் என்பது என் தந்தையின் ஆசை. அதற்கு ஏற்றாற்போல் நான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன்.

ஆனால், என்னால் சரியாக எழுத முடியவில்லை. இதையடுத்து, ஆந்திராவில் குரூப்-1 தேர்வு எழுதி அதில் தேர்வாகினேன். சிறுவயதாக இருக்கும்போதிருந்தே நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும் என்று என் பெற்றோர் என்னிடம் கூறுவர். என் சகோதரி ஆந்திராவில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

டிஎஸ்பியாக இருக்கும் மகளுக்கு சல்யூட் செய்தது குறித்து காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர் கூறுகையில், “ பிரசாந்தி டிஎஸ்பியாக இருக்கிறார். என்னைவிட உயர்ந்த அதிகாரி. அவர் வரும்போது அவருக்கு சல்யூட் செய்வதுதான் முறை. இதில் மகள், தந்தை என்பது கிடையாது. இருந்தாலும், என் மகளை வரவேற்று அவருக்கு சல்யூட் செய்தபோது எனக்குப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x