Published : 02 Jan 2021 03:23 AM
Last Updated : 02 Jan 2021 03:23 AM

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பெரும் போராட்டம்: வாழ்க்கையைப் புரிய வைத்த கரோனா வைரஸ்

எம்.வெங்கய்ய நாயுடு

க ரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 10 மாதங்களாக முகக் கவசத்துடன் வாழ்கிறோம். இதுவரை குடும்பம், உறவு, சுற்றம், நட்போடு பின்னிப் பிணைந்து வாழ்ந்த நாம், இப்போது வாய், மூக்கை முகக் கவசத்தால் மூடி இடைவெளி விட்டு விலகி நிற்கிறோம். இந்த அசாதாரண வாழ்க்கை, நமது வாழ்க்கையின் நோக்கம், அர்த்தம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

கரோனா வைரஸால் கட்டாயதனிமையை பலரும் அனுபவித்திருப் பார்கள். அவர்களில் நானும் ஒருவன். கரோனா தொற்றால் நானும் கட்டாய தனிமையை எதிர்கொண்டேன். இக்கட்டான காலத்தில் உயிர் பிழைத்திருப்பதற்காக அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்கிறோம். இந்த முகக்கவச வாழ்க்கை, நமது வாழ்வின் முகக்திரையை கிழித்துள்ளது.

வாழ்வின் நோக்கம்

"ஒவ்வொரு மனிதனுக்கும் மகிழ்ச்சியாக வாழ உரிமை இருக்கிறது. துன்பம் தவிர்த்து, இன்பமாக வாழ்வதே வாழ்க்கையின் உண்மையான அர்த்தம்" என்று புத்த மதத் தலைவர் தலாய் லாமா கூறுகிறார். இப்போது நமது மனதில் கேள்வி எழுகிறது. எது மகிழ்ச்சி, அதை எவ்வாறு அடைவது?

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்து பணியாற்றுகிறார்கள். உறவுகளை, நண்பர்களை சந்திக்காமல் வீட்டில் முடங்கி இருந்து பணி செய்வதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்குமா? இது பலரின் கேள்வி.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு முழுவதும் பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் குழப்பங்கள், சவால்களை மனித குலம் சந்தித்தது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு வாழ்வது என்பதை கரோனா வைரஸ் நமக்கு கற்று தந்திருக்கிறது. நமது வாழ்க்கை பயணம் எப்போதும் நெடுஞ்சாலை பயணமாக, ஒரே சீராக இருக்காது. கரடுமுரடான பாதைகளும் வாழ்க்கையில் குறுக்கிடும். மேடு, பள்ளங்களை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு சவாலையும் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.

வாழ்க்கையின் தத்துவம் குறித்து கிரேக்க ஞானி பிளாட்டோ மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். "வாழ்க்கையின் பல நிலைகளை புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை பயணம், அனுபவங்களுடன் முரண்படாமல் கால மாற்றத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். நமக்குள் அடிக்கடி கேள்வி எழுப்பி உண்மைகளை கண்டறிய வேண்டும்" என்று கூறுகிறார்.

நவீன வாழ்க்கை நடைமுறையில் நாம் நமக்குள் பேசிக் கொள்வதை நிறுத்திவிட்டோம். கரோனா வைரஸ் நமக்கு புதிய படிப்பினையை தந்துள்ளது. நாம் எவ்வாறு வாழ்கிறோம். நமது வாழ்வியல் நடைமுறை சரிதானா? நமது தவறுகளை எவ்வாறு திருத்திக் கொள்வது என்பதை கரோனா கண்டிப்புடன் கற்று தந்திருக்கிறது.

சவால் நிறைந்த வாழ்க்கை

பிறப்பும், இறப்பும் நமது கையில் இல்லை. இந்த இரு முனைகளுக்கு இடையே பல்வேறு சவால்களை கடந்து செல்லும் பயணமே வாழ்க்கை. பூவுலகில் எல்லாவற்றையும்விட நானே உயர்ந்தவன் என்ற மனிதனின் ஆணவத்தை கரோனா சுக்குநூறாக உடைத்தெறிந்து உள்ளது. பூமியில் உயிருள்ளவை, உயிரற்றவை என அனைத்து வகையான இயற்கை அம்சங்களுடன் நாம் ஒன்றிணைந்து வாழ வேண்டும். ஒன்றை அழித்து மற்றொன்று வாழ முடியாது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸ் உட்பட பல்வேறு வைரஸ்கள் அவ்வப்போது தலைதூக்கி உலகை அச்சுறுத்தி வருகின்றன. இயற்கைக்கு எதிராக செயல்பட்டால், அது நம்மை அழித்துவிடும் என்றஉண்மை அப்பட்டமாக உணர்த்தப்படுகிறது. அன்னை பூமியில் மனித குலமும் ஓர் அங்கம். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்காமல் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

சொந்த அனுபவம்

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, நான் தனிமையில் இருந்தபோது இதுவரை கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தேன். அப்போது பல உண்மைகளை கண்டுபிடித்தேன். வாழ்க்கை அதிவேகமாக கடந்து செல்கிறது. நான் எனது பணியில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறேன். அதற்காக அதிக நேரத்தை செலவிட்டிருக்கிறேன். குடும்பத்துக்காக நான் ஒதுக்கிய நேரம் மிகவும் குறைவு. எனது வாழ்க்கையில் சோதனையான காலங்களை கடந்து சென்றிருக்கிறேன். பல்வேறு ஆபத்துகளில் இருந்து ஆன்மிக வாழ்க்கை என்னை கைதூக்கி காப்பாற்றியுள்ளது. சிக்கலான பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவியிருக்கிறது. எனது அரசியல் பயணம் மிகவும் நீண்டது. இந்த அரசியல் பயணத்துக்குப் பிறகு முழுமையாக சமூக சேவையில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறேன்.

பகவத் கீதை உபதேசம்

மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என மனிதன் விரும்புகிறான். தனக்கு உள்ளேயும், வெளியேயும் அமைதியை தேடி அலைகிறான். இவை மனிதனின் இயல்பு. வாழ்க்கை என்பது ஒரு முறை மட்டுமே. இந்த வாழ்க்கையை பயனுள்ளதாக, அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும். அள்ளி கொடுப்பதும் அரவணைப்பதும் நமது மரபு.

நம்மை சுற்றியிருக்கும் சகல உயிரினங்கள், சுற்றுவட்டார மக்கள், சமூகத்துடன் இணக்கமாக இருக்க வேண்டும். சமுதாய நலனில் அக்கறை கொள்ள வேண்டும். இயற்கையை போற்றிப் பாதுகாக்க வேண்டும். அதோடு இணைந்து வாழ வேண்டும். மனித குலமும் இயற்கையும் தழைத்திருக்க செய்ய வேண்டும். இதில்தான் வாழ்க்கையின் அர்த்தம் அடங்கியிருக்கிறது. "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்." இது பகவத் கீதை கூறும் வாழ்க்கை தத்துவமாகும். நிச்சயமற்ற எதிர்காலத்தை பகவத் கீதையின் தத்துவம் மூலம் எளிதாக எதிர்கொள்ள முடியும்.

சோதனையில் சாதனை

புதிய வகை கரோனா வைரஸ் பரவல் குறித்து உலகம் முழுவதும் அதிகம் பேசப்படுகிறது. பிரச்சினைகள் ஒருபோதும் ஓய்வதில்லை. எதையும் எதிர்கொள்ளும் மன தைரியம் வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த 2020-ம் ஆண்டில் பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளோம். அதிலும் மனித குலம் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறது. பொதுவாக ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால் கரோனா வைரஸை விரட்டியடிக்க ஓராண்டிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்படைந்துள்ளது.

உலகளாவிய அளவில் கரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. கரோனா குறித்து ஆய்வு செய்த நாடாளுமன்ற குழு, அரசின் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை வெகுவாகப் பாராட்டியுள்ளது. இந்தியாவில் வைரஸ் பரவல் தடுக்கப்பட்டு, உயிரிழப்பு கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த பல மாதங்களாக கரோனா வைரஸை எதிர்கொண்டதில் பல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளோம். புதிதாக பிறந்துள்ள 2021-ம் ஆண்டு, மிகச் சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும். இதற்கு ஒவ்வொரு தனிநபரும், சமுதாயமும் கரோனா வைரஸை வேரறுப்பதில் ஒருமித்து செயல்பட வேண்டும். வைரஸ் ஒழியும் வரை விழிப்போடு இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் கரோனாவை வென்று வெற்றிவாகை சூட முடியும்.

கட்டுரையாளர்,

எம்.வெங்கய்ய நாயுடு,

இந்திய குடியரசு துணைத் தலைவர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x