Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM

ஆக்ஸ்போர்டு கரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி: மத்திய அரசின் நிபுணர் குழு வழங்கியது

புதுடெல்லி

அவசர கால பயன்பாட்டுக்கு ஆக்ஸ்போர்டு கரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசின் நிபுணர் குழு அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த கட்டமாக இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, ஆக்ஸ்போர்டு தடுப் பூசிக்கு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உள்நாடு, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. இதில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு' என்ற கரோனா தடுப்பூசியை மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த செரம் இன்ஸ்டிடியூட் பரிசோதனை செய்து, உற்பத்தி செய்து வருகிறது.

ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை இணைந்து ‘கோவேக்ஸின்' என்ற பெயரில் கரோனா தடுப்பூசியை தயாரித் துள்ளது.

ஆக்ஸ்போர்டு, பாரத் பயோ டெக் மற்றும் அமெரிக்காவின் பைசர் ஆகிய 3 நிறுவனங்கள், தங்களது கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க கோரிமத்திய அரசிடம் விண்ணப்பித் துள்ளன.

இதுதொடர்பாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ),சிறப்பு நிபுணர் குழு டெல்லியில் நேற்றுவிரிவான ஆலோசனை நடத் தியது. இந்த கூட்டத்தில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கரோனா தடுப்பூசியை அவசர கால அடிப்படையில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை பயன்படுத்த பிரிட்டன், பிரேசில் உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளன. இந்த தடுப்பூசியை சேமித்து வைப்பதும், எடுத்து செல்வதும் எளிது. இதர தடுப்பூசிகளை ஒப்பிடும்போது விலையும் குறைவு. இவற்றை கருத்தில் கொண்டு ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு நிபுணர் குழு அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்த கட்டமாக இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ), ஆக்ஸ் போர்டு தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யும். அந்த அமைப்பும் விரைவில் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகே இந்திய சந்தையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி அறிமுக மாகும். செரம் இன்ஸ்டிடியூட் தலைமை செயல் அதிகாரி அதார் பொன்னவாலா கூறும்போது, ‘‘மத்திய அரசுக்கு கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியை ரூ.440 என்ற விலைக்கு வழங்குவோம். தனியாருக்கு ரூ.700 முதல் 800 வரை விலை நிர்ணயிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

செரம் இன்ஸ்டிடியூட் இயக்குநர் உமேஷ் ஷாலிகாரம் கூறும்போது, ‘‘இன்றைய நிலையில் 7.5 கோடிகோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகளை தயாரித்துள்ளோம். இந்த மாதத்தின் முதல் வாரத்துக்குள் 10 கோடி தடுப்பூசிகள் தயாராகிவிடும். முதலில் இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்வோம். அதன்பிறகு வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வோம்’’ என்று தெரிவித்தார்.

பாரத் பயோ டெக்கின் கோவேக்ஸின் மற்றும் அமெரிக் காவின் பைசர் நிறுவன கரோனா தடுப்பூசிகளுக்கும் விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி விநியோகம் தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிகளை மத்திய சுகாதாரத் துறை அண்மையில் வெளியிட்டது. தற்போது தடுப்பூசி ஒத்திகை தொடங்கப்படுவதால் அதில் எழும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு விரிவான வழிகாட்டு நெறிகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 6 மாதங்களில் 30 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசியை போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஆக்ஸ்போர்டு கரோனா தடுப்பூசி முதலில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இது 2 முறை போட வேண்டிய தடுப்பூசியாகும். முதல் தடுப்பூசியை போட்ட பிறகு குறிப்பிட்ட நாட்கள் கழித்து மீண்டும் 2-வது தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.vac

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x