Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM

டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்; தமிழகத்துக்கு தங்க விருது: காணொலியில் குடியரசுத் தலைவர் வழங்கினார்

டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநில பிரிவில் டிஜிட்டல் இந்தியா-2020 தங்க விருதை தமிழகத்துக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலியில் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுமையான டிஜிட்டல் தீர்வுகளை முன்னிறுத்தி அவற்றை அனைத்து அரசு நிறுவனங்களும் பின்பற்றுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, டிஜிட்டல்இந்தியா விருதுகள் இந்திய தேசியஇணையத்தில் நிறுவப்பட்டுள்ளன.

சுகாதாரம், தொழிலாளர், நிதி, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும்பொருட்டு, விரிவான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உபயோகிப்பதில் முன்னோடி முயற்சிகளைகொண்டுள்ள மாநிலம் மற்றும்யூனியன் பிரதேசங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

நம்பிக்கை இணையம், இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு, பல்பொருள் இணையம், இயற்கை மொழி செயலாக்கம், குரல் பயனர்இடைமுகம், பெரிய தரவு மற்றும்பகுப்பாய்வு, மெய்நிகர் உண்மை போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களும் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், ‘டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்’ என்ற பிரிவில் ‘டிஜிட்டல் இந்தியா- 2020 தங்க விருதை’ இந்த ஆண்டு தமிழகம் பெற்றுள்ளது. இந்த விருதைநேற்று நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா-2020 விருதுகள் வழங்குவதற்கான மெய்நிகர் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இவ்விழாவில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் அஜய் பிரகாஷ் ஷானே, தேசிய தகவலியல் மையதலைமை இயக்குநர் நீட்டா வர்மா,தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு தேசிய தகவலியல் மைய தொழில்நுட்ப இயக்குநர்கள் எம்.பாலசுப்பிரமணியன், ஜே.அருண்குமார், டி.ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x