Published : 31 Oct 2015 07:24 PM
Last Updated : 31 Oct 2015 07:24 PM

அவசரகதி தடை விதிப்புகளால் வளர்ச்சி பாதிக்கும்: மத்திய அரசுக்கு ரகுராம் ராஜன் சூசக எச்சரிக்கை

ஐஐடி-டெல்லி பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், அவசரகதியில் விதிக்கப்படும் தடை உத்தரவுகளால் நாட்டின் வளர்ச்சி தடைபடும் என்று கூறியுள்ளார்.

மாட்டிறைச்சி மீதான தடை, அதனையடுத்த எதிர்ப்புகள், வன்முறைச் சம்பவங்கள், குறுக்கு மறுக்கான அரசியல் கருத்துக்கள் ஆகியவை நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் என்பதை ரகுராம் ராஜன் சூசகமாக தனது உரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

சர்வதேச தரநிர்ணய மூடீஸ் ஏஜென்சி, பிரதமர் நரேந்திர மோடியை அவரது கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து அறிவுறுத்தும் விதமாக எச்சரித்ததையடுத்து ரகுராம் ராஜன் இதனை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, வன்முறைகள் அதிகம் வெடிக்கும் ஆபத்து உள்ளது என்றும், இதனால் நாடாளுமன்ற விவாதத்தில் வன்முறை குறித்த எதிர்ப்புகளே அதிகம் இடம்பெறும், பொருளாதாரக் கொள்கையிலிருந்து விவாதம் திசைதிரும்பும் என்றும் மூடிஸ் ஏஜென்சி எச்சரிக்கை விடுத்திருந்த்து.

குறிப்பாக, அரசியல் இன்னும் மேம்பட வேண்டும் என்றும், நீண்ட கால வளர்ச்சிக்கு பொருளாதார சீர்திருத்தங்கள் மீது கவனக்குவிப்பு இருக்க வேண்டும் என்றும் மூடீஸ் தெரிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே ரகுராம் ராஜன் ஐஐடி உரை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

“நீங்கள் செய்யும் ஒரு செயல் என்னை காயப்படுத்தும், ஆனால் வேறு விதத்தில் தீங்கிழைக்காது, ஒரு செயலை தடை செய்வதற்கு உயர்ந்த பட்ச அளவுகோல்கள் தேவை. எந்த ஒரு தடை உத்தரவும், அதனைச் செயல்படுத்த ஏற்படுத்தப் படும் கண்காணிப்புச் சட்டமும் காயப்படுத்தும். எப்படி அதீத உரிமை வழங்கள் முன்னேற்றத்தைத் தடுக்குமோ அப்படித்தான் அரசியல் ரீதியாக சரியானது என்று கருதப்படும் அதீத உத்தரவுகளும் முன்னேற்றத்தை முடக்கவே செய்யும்.

தடைகளிடத்தில் விரைவாக தஞ்சமடைவது விவாதத்தை முடக்கவே செய்யும். எனவே பரஸ்பர மரியாதை மற்றும் சகிப்புத்தன்மையின் ஊடாக சுதந்திர கருத்துக்களுக்கான சூழலை மேம்படுத்துவது நல்லது.

விவாதத்தில் சகிப்புத் தன்மை என்பது காயப்படுத்தலை வெளியே விரட்டி விடும். மேலும் சகிப்புத்தன்மை என்பது மரியாதையை உருவாக்கும். அதிர்ஷ்டவசமாக இந்தியா எப்போதும் விவாதத்தையும் பல்வேறு கருத்துகளை கொண்டிருக்கும் உரிமையையும் காத்தே வந்துள்ளது.

ஒருவரது கருத்து குறித்து பாதுகாப்பின்மையாக உணர்வது அல்ல சகிப்புத் தன்மை என்பது. மேலும் எந்த ஒரு கருத்தையும் கேள்விக்குட்படுத்துவதை ஏற்றுக் கொள்வதும் சகிப்புத்தன்மையே. அதாவது, ஒரு விதமான பற்றற்ற தன்மை அல்லது விலகியிருக்கும் தன்மை முதிர்ச்சியான விவாதத்துக்கு முற்றிலும் அவசியமானது.

நாம் கணிக்கக்கூடிய வகையில் எதிர்வினையாற்றுவதை விட, பிரச்சினைகளை முடுக்கி விடுவோர் தங்களது கவலைகளை விளக்கக் கோர வேண்டும். இப்படிச் செய்தால் எதிர்ப்புச் சக்திகள் தங்களது வாதங்களை முன்னெடுத்துச் செல்வதில் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டி வரும்.

எனவே, கிளர்ச்சி செய்வோர் எதிர்ப்பு விசையை அற்பத்தனமாக முடுக்க முடியாது, இதனால் ஒவ்வொரு குழுவிலும் அதிகம் இருக்கும் தீங்கு விளைவிக்க காத்திருக்கும் சக்திகள் சுலபமாக பிரச்சினைகளைக் கிளறி விட முடியாத நிலை ஏற்படும்.

ஒருவர் வைத்திருக்கும் கருத்துகளுக்கு சவால் ஏற்படுத்துவது என்பது முன்னேற்றத்துக்கு அவசியமானது என்றே நான் கருதுகிறேன்” என்றார் ரகுராம் ராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x