Last Updated : 07 Oct, 2015 08:01 AM

 

Published : 07 Oct 2015 08:01 AM
Last Updated : 07 Oct 2015 08:01 AM

இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்: ஜெர்மனி நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

பெங்களூருவில் நடைபெற்ற இந்திய-ஜெர்மனி வர்த்தக மாநாட்டில் தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஜெர்மனி தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்றுக்கொண்ட அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதாக அறிவித்தார்.

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

பெங்களூரு ஆடுகோடியில் உள்ள ‘நாஸ்காம்’ என்னும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் தேசிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற வர்த்தக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் மெர்க்கலும் கலந்து கொண்டனர்.

இந்திய மற்றும் ஜெர்மனி பிரதமர்கள் வருகையையொட்டி பெங்களூரு மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. போக்கு வரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு 17 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பெங்களூருவில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நேற்று பிற்பகல் நடைபெற்ற‌ இந்திய - ஜெர்மனிய தொழில் முதலீட்டா ளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய தாவது:

உலக நாடுகளின் முதலீட்டாளர் களுக்கு ஏற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது. எனவே இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய ஜெர்மனி தொழில் முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும்.

ஜெர்மனியின் தொழில் நுட்பங் களையும், ஆக்கப்பூர்வமான ஆற்றலையும் இந்தியா வரவேற்கிறது. பொருளாதார ரீதியில் ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி பல நாடுகள் திணறி வரும் சூழலிலும் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற இடமாக எப்போதும் திகழ்கிறது.

இந்தியாவில் பொருளாதார நிலையை மேம்படுத்த கடந்த 15 மாதங்களாக கடுமையாக உழைத்திருக்கிறோம். புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி மசோதாவை வருகிற 2016-ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றி விடுவோம்.

அந்நிய முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் நாட்டின் சுற்றுச்சூழல் அனுமதி, பாதுகாப்பு அனுமதி போன்ற சிக்கலான விஷய‌ங்களை எளிதாக்கி இருக்கிறோம். அந்நிய முதலீடுகள் அதிகரிப்பதற்காக பல சிக்கலான‌ விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. தொழில் துறையில் அனுமதி வழங்கும் பணியை மத்திய அரசு மிக விரைவாக மேற்கொண்டு வருகிறது.

'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின்படி இந்தியா ஐடி துறையில் மிக வேகமாக முன்னேறி ஐடி புரட்சியின் உச்சநிலையை எட்டி யுள்ளது. இந்தியாவின் உற்பத்தி துறையை முன்னேற்றுவதற்காக ‘மேக் இன் இந்தியா’ திட்டம் கொண்டுவரப்பட்டுள்ள‌து.

ஜெர்மனியில் இருந்து திறமை, தொழில்நுட்பம், முதலீட்டை ஏற்க இந்தியா தயாராக உள்ளது. திறமை வாய்ந்த இந்திய இளைஞர்கள் சிறப்பாக பணியாற்றுவார்களே தவிர, அதிக வருமானத்தை கருத்தில் கொள்வதில்லை. இத்தகைய திறமையை ஜெர்மனி முதலீட்டா ளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

ஆசியாவின் சிலிக்கான் வேலி இந்தியா: ஏஞ்சலா மெர்க்கல்

ஜெர்மனி பிரதம‌ர் ஏஞ்சலா மெர்க்கல் பேசியதாவது:

ஆசியாவின் சிலிக்கான் வேலியாக இந்தியா திகழ்கிறது. பல்வேறு துறைகளில் மிகுந்த ஆற்றல் கொண்ட ஏராளமான இளைஞர்கள் இங்கு இருக்கிறார்கள். ஜெர்மனியில் குறைவாக காணப்படும் இத்தகைய வளத்தை, முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்தியாவில் சுமார் 1,600 ஜெர்மனி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பெங்களூருவில் மட்டும் 170 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் இந்தியாவுக்கு பெரிய அளவிலான‌ வருமானமும், 40 ஆயிரம் திறமையான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.

ஐடி துறையில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. திறமை மேம்பாடு மற்றும் பங்கீடு விஷயங்களில் ஜெர்மனி கவனம் செலுத்தினால் இரு நாடுகளும் சர்வதேச அளவில் மிகப்பெரிய உயரத்தை அடைய முடியும். மேலும் தகவல் தொழில்நுட்பம், உள் கட்டமைப்பு, எரிசக்தி பங்கீடு, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடன் ஜெர்மனி இணைந்து பங்காற்றும். இந்திய முதலீட்டாளர்கள் ஜெர்மனியில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும். இந்திய முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் ஜெர்மனியில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள ஜெர்மனியின் போஷ் பொறியியல் மையத்தின் செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் இலக்குகள் குறித்து விரிவாக மோடியும், மெர்க்கெலும் விவாதித்தனர். மேலும் இளம் தொழில் முனைவோர், மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் இருவரும் கலந்துக்கொண்டனர். அப்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x