Published : 25 Dec 2020 03:16 AM
Last Updated : 25 Dec 2020 03:16 AM

ரவீந்திரநாத் தாகூரின் தொலைநோக்கு பார்வையே ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் சாராம்சம்: விஸ்வ பாரதி பல்கலை. நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி உரை

ரவீந்திரநாத் தாகூரின் தொலைநோக்குப் பார்வையே, 'சுயசார்பு இந்தியா' திட்டத்தின் சாராம்சம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் உள்ளது. இது, 1921-ல்ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்று பேசியதாவது:

சுதந்திரப் போராட்ட காலத்தில் தாகூரின் வழிகாட்டுதலால் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் இந்திய தேசிய உணர்வை வலுவாக ஏற்படுத்தி வந்தது. சுதேசி சமூகத்துக்கு ரவீந்திரநாத் தாகூர் அழைப்பு விடுத்தார். விவசாயம், வர்த்தகம், தொழில், கலை, இலக்கியம் போன்றவற்றில் அவர் தற்சார்பை காண விரும்பினார். இந்தியாவின் ஆன்மிக விழிப்புணர்வில் இருந்து ஒட்டுமொத்த மனிதகுலமும் பலன் அடைய வேண்டும் என தாகூர் விரும்பினார். இந்த உணர்வில் இருந்து தோன்றியதுதான் மத்திய அரசின் ‘சுயசார்பு இந்தியா' தொலைநோக்கு திட்டமாகும். மத்திய அரசின் சுயசார்பு இந்தியா அழைப்பு,இந்தியா மட்டுமின்றி இந்த உலகத்துக்கும் நன்மை தரக்கூடியதாகும்.

இந்தியாவை சிறந்த நாடாகமாற்றுவதற்கு பல நூற்றாண்டுகளாக பங்களித்த அனைவரிடம் இருந்தும் நாம் உத்வேகம் பெறவேண்டும். நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள், சுதந்திரத்துக்காக போராடியபோது கற்பனை செய்திருந்த இந்தியாவையும் நாம்மனதில் கொள்ள வேண்டும். அதனால்தான் சுயசார்பு இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருகிறோம்.

நாட்டின் நிலையான ஆற்றலுக்கான மதிப்புமிக்க ஆதாரமாகஇந்தப் பல்கலைக்கழம் விளங்கியது. இங்கு தோன்றிய கருத்துகள் சர்வதேச துறையில் தேசத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இவ்விழாவில் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மம்தா கட்சி புகார்

இவ்விழாவுக்கு முதல்வர் மம்தாபானர்ஜியை அழைக்காமல் மத்தியஅரசு அவமதித்துவிட்டதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் கூறியது. ஆனால் பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் மம்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் விழாவில் பங்கேற்காமல் பல்கலைக்கழகத்தை மம்தாஅவமதித்து விட்டதாகவும் பாஜக கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x