Last Updated : 15 Oct, 2015 08:10 AM

 

Published : 15 Oct 2015 08:10 AM
Last Updated : 15 Oct 2015 08:10 AM

மேம்பாலம் கட்டுவதில் தாமதம்: பள்ளி செல்ல தாமதமாவதால் மோடிக்கு சிறுவன் கடிதம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தொட்ட பொம்மசந்திரா பகுதியை சேர்ந்த அபினவ் (8) , யஷ்வந்த்பூரில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். தனது ஊரில் மேம்பால கட்டுமானப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

அபினவ் தனது கடிதத்தில்,

“எனது வீட்டில் இருந்து 3 கிமீ தூரத்தில் நான் படிக்கும் பள்ளி இருக்கிறது. பள்ளிக்கு செல்லும் வழியில் கோரகுண்டபாளையா என்ற இடத்தில் ரயில் பாதையை கடக்க‌ மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு மேம்பால‌ கட்டுமானப் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருவ‌தால் பள்ளிக்கு செல்ல 45 நிமிடங்கள் ஆகிறது.

இங்கு நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸில் செல்லும் நோயாளிகள் மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் உயிரிழக்கின்றனர். இதே போல நானும் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாததால் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே இந்த மேம்பால கட்டுமானப் பணிகள் உடனடியாக முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பய‌ன்பாட்டுக்காக திறக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பிரதமர் அலுவலகம், அனுப்பியுள்ள பதில் கடிததத்தில் “இந்த மேம்பால கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்துவது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது சமூக அக்கறை கொண்ட செயலுக்கு எங்களது பாராட்டுகள்'' என குறிப்பிடப் பட்டுள்ளது.

அபினவ் கூறும்போது, “மக்களின் தேவைகளைக் கேட்டு பெறுவ‌து நம்முடைய உரிமை என்பதால் கடிதம் எழுதினேன்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x