Last Updated : 22 Dec, 2020 10:01 AM

 

Published : 22 Dec 2020 10:01 AM
Last Updated : 22 Dec 2020 10:01 AM

அலிகர் முஸ்லிம் பல்கலைகழக நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதால் சர்ச்சை

உத்தரப்பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்தர மோடி டிசம்பர் 22 இன்று கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சியை விமர்சித்தும், ஆதரித்தும் கருத்துக்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கடந்த 1920 ஆம் ஆண்டு சர் சையது அகமது கான் என்பவரால் துவக்கப்பட்டது அலிகர் முஸ்லிம் பல்கலைழகம். மத்திய அரசின் பழம்பெரும் பல்கலைழகமாக இருக்கும் இது, அலிகர் நகரில் அமைந்துள்ளது.

நூறு ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு அதன் நூற்றாண்டு விழா இன்று இணையதளம் வாயிலாக நடைபெறுகிறது. இதன் முக்கிய விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இவருடன் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வித்துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கும் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இவர்கள் பங்கு பெறுவதன் மீது ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் இதன் வரலாற்றுத்துறையின் தகைசால் பேராசிரியரும் உலகப் புகழ்பெற்றவருமான இர்பான் ஹபீப் கூறும்போது, ‘நாட்டின் பிரதமரான மோடி இப்பல்கலைகழக விழாவிற்கு வருவது முக்கியமல்ல.

இங்கு கல்வியாளர்களும், அறிஞர்களும் வருவது தான் முக்கியம். குறிப்பாக பிரதமர் மோடி பண்டையக் கலாச்சாரம் மீது நம் நாட்டை தவறாக வழிநடத்துகிறார்.

உ.பி. அரசின் லவ் ஜிகாத் சட்டத்தை பார்த்து பொறுத்துக் கொண்டிருக்கும் பிரதமரை இவ்விழாவிற்கு அழைத்தது இப்பல்கலைகழக துணைவேந்தரின் தனிப்பட்ட முடிவாகும்.’ எனத் தெரிவித்தார்.

இவர் போன்றவர்கள் கருத்துக்களை எதிர்க்கும் வகையில் அலிகர் பல்கலைழக முன்னாள் மாணவர்கள் அமைப்பில் பலரும் பிரதமருக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். அதில் நாட்டின் பிரதமராக அவருக்கு இவ்விழாவில் கலந்து கொள்ளும் முழு உரிமை உள்ளதாகவும், இதை தாம் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வருடம், மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றிய போது, நாட்டின் முதல் எதிர்ப்பு இப்பல்கலைழக மாணவர்களிடம் கிளம்பி இருந்தது.

இதனால், விழா சமயத்தில் அம்மாணவர்களால் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க பல்கலைகழகப் பகுதியில் மத்திய பாதுகாப்பு படைகள் அமர்த்தப்பட்டுள்ளன. சுமார் 37,000 மாணவர்கள், 1800 பேராசிரியர்கள் மற்றும் 4,000 அலுவலர்களுடன் செயல்படும் இப்பல்கலைகழகமானது மத்திய அரசின் நிதியின் உதவியால் செயல்படுகிறது.

எனினும், இங்கு பாஜக தலைமையிலான மத்திய அரசின் அமைச்சர்களை அதன் விழாக்களுக்கு பெரும்பாலும் அழைப்பதில்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய மனிதவளத்துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, வளாகம் வரை வந்து மாணவர்கள் எதிர்ப்பின் காரணமாக திரும்பிச் சென்றிருந்தார்.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது அவரது மத்திய அமைச்சர்கள் பலரும் இதன் விழாவிற்கு வந்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுலும் ஒரு அரசியல்வாதிகளாக எந்த எதிர்ப்பும் இன்றி வந்து சென்றுள்ளனர்.

முசாபர்நகரின் மதக்கலவரத்திற்கு பின் இப்பல்கலைழகத்தின் ஆசிரியர்கள் சங்க விழாவிற்கு வந்த முலாயம்சிங்கும் திரும்பி அனுப்பப்பட்டார். இதன் பின்னணியில், உ.பி. முதல்வராக இருந்த போது முசாபர்நகர் கலவரத்திற்கு முலாயம் தான் காரணம் என எழுந்த புகார் இருந்தது.

இதேபோன்ற ஒரு காரணத்திற்காக காங்கிரஸின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்துக்கும் பல்கலைகழக விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. இவருக்கும் அதன் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x