Published : 01 Mar 2014 08:35 AM
Last Updated : 01 Mar 2014 08:35 AM

ஓங்கி ஒலிக்கும் வாக்காளர் வாய்ஸ்

தமிழ்ச் சூழலில் கால்பதித்தது முதல் ‘தி இந்து’ எடுத்துவரும் முன்முயற்சிகளும் மேற்கொண்டுவரும் மாற்றங்களும் வாசகர்கள் அறிந்தவைதான். ஆனால், இந்த முயற்சி தமிழ் இதழியலுக்குப் புதிது.

மாபெரும் திருவிழா

உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது இந்தியா. 1951-1952-ல் முதல் தேர்தலை நாடு எதிர்கொண்டபோது, இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 18 கோடி. 2.24 லட்சம் வாக்குச்சாவடிகள் அப்போது நாடு முழுவதும் அமைக்கப்பட்டன.

20,00,000 வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. கடைசியாக 2009-ல் நடந்த 15-வது மக்களவைத் தேர்தலில், வாக்காளர்களின் எண்ணிக்கை 71.4 கோடி. மொத்தம் 8,28,804 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 13,68,430 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வரவிருக்கும் 16-வது மக்களவைக்கான தேர்தலிலோ வாக்காளர்களின் எண்ணிக்கை 80 கோடிக்கும் மேல். கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

எனில், பிரம்மாண்டம் எத்தகையதாக இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? நமக்கு உண்மையில் நம்முடைய ஜனநாயகத்தின் பிரம்மாண்டம் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் நாடுகள் இரண்டிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையைவிட, இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிற சிறிய உண்மை சொல்லும் இந்தப் பிரம்மாண்டத்தின் வீச்சை.

அப்படிப்பட்ட பிரம்மாண்டமான மக்கள் திருவிழாவைக் கொண்டாடுவதில் உற்சாகமாகக் கைகோக்கும் ‘தி இந்து’ ஒரு வித்தியாசமான ஆய்வை நடத்தியிருக்கிறது.

எவ்வகையில் புதிது?

ஊடகங்கள் தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்துவது புதிதல்ல. சொல்லப்போனால், அரசியல் கட்சிகளும்கூட கருத்துக் கணிப்புகளை நடத்தும் காலகட்டம் இது. அப்படியிருக்கும்போது, ‘தி இந்து’வின் கள ஆய்வு எந்த வகையில் வித்தியாசமானது அல்லது புதிதானது?

பொதுவாக, கருத்துக் கணிப்புகளை யார் நடத்தினாலும் அவற்றின் அடிப்படை என்னவாக இருக்கும் என்பது நாம் அறிந்ததுதான். “எந்தக் கட்சிக்கு ஓட்டு போடுவீர்கள்?”, “உங்கள் தொகுதி பிரதிநிதியின் செயல்பாடுகள் எப்படி?” என்பன மாதிரியான கேள்விகளை உள்ளடக்கிய அரசியல் பார்வையையே அவை பெற்றிருக்கும். நாம் அப்படி ஓர் ஆய்வை நடத்த விரும்பவில்லை.

மாறாக, எல்லா தேர்தல்களிலுமே மக்களிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை நோக்கி நம் கவனத்தைத் திருப்பினோம். கல்வி, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள், வாழ்வாதாரப் பிரச்சினைகளை எந்த அளவுக்கு ஆட்சியாளர்கள் பூர்த்திசெய்திருக்கிறார்கள்; இன்னும் மக்கள் எவற்றையெல்லாம் எதிர்பார்க்கிறார்கள்; வரும் தேர்தலில் அவற்றின் தாக்கம் எப்படி எதிரொலிக்கும் என்பதை அறிவதே இந்தக் கள ஆய்வின் நோக்கம்.

இது ஒரு மாறுபட்ட பார்வை. பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் தொடர்பு இருக்குமா, இது என்ன உள்ளாட்சித் தேர்தலா என்ற கேள்விகள் சிலருக்கு எழலாம். தன்னுடைய வீட்டைச் சுற்றி சாக்கடை சூழ, மின்சாரம் இல்லாத இரவில் கொசுக்கடியில் தூக்கத்தைத் தொலைக்கும் ஒரு வாக்காளர், தனக்கு ஆயுதம்போலக் கிடைக்கும் வாக்கை சித்தாந்த அடிப்படையில் மட்டும்தான் அணுகுவார் என்று நாம் நம்பவில்லை.

இந்தியா போன்ற ஒரு தேசத்தில் சித்தாந்தங்கள் ஏற்படுத்தும் தாக்கத்துக்கும் விலைவாசி உயர்வு ஏற்படுத்தும் தாக்கத்துக்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதில்லை என்பதே உண்மை.

முதல்முறை

இப்படி ஓர் ஆய்வை மேற்கொள்வது என்று முடிவெடுத்தவுடன், அதை அறிவியல்பூர்வமான முறையில், தொழில்முறையாகத்தான் மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுப்பதில் ‘தி இந்து’ ஆசிரியர் குழுவினரிடையே இருவேறு கருத்துகள் எழவில்லை.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘ஜி.எஃப்.கே. மோட்’(GFK MODE) நிறுவனத்துடன் ‘தி இந்து’ குழுவினரும் இணைந்து, தமிழகம், புதுச்சேரியைக் களமாகக் கொண்டு ஆய்வை மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

அதன்படியே ஆய்வு நடத்தப்பட்டது. அதேசமயம், மக்களுடன் நெருக்கமாகப் பல்லாண்டுகளாகப் பயணிக்கும் செய்தியாளர் குழுவும் கள ஆய்வை நேரடியாகப் பார்த்து மக்களின் உணர்வு களைப் புரிந்துகொண்டது. கட்சி அரசியல் சார்பு இல்லாமல், மக்கள் பிரச்சினைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு, அறிவியல் முறையில் ஒரு நாளிதழ் இப்படி ஓர் ஆய்வில் ஈடுபடுவது இதுவே முதல்முறை.

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ஆண்கள், பெண்கள், அவர்களில் புதிய இளம் வயது வாக்காளர்கள், நடுத்தர வயது வாக்காளர்கள், மூத்த குடிமக்கள் எனப் பிரித்து மேற்கொள்ளப்பட்டது இந்தக் கள ஆய்வு. மாநகராட்சிகளில் மட்டுமல்ல; நகராட்சிகள், சிறப்பு நிலை நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அமைப்பின் கடைசி நுனி வரை சென்று மக்களுக்குக் கிடைக்கும் வசதிகள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அவற்றுக்குக் கிடைத்த தீர்வுகள், இப்போது மக்கள் என்ன எதிர்பார்ப்பில், என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று பார்த்தோம்.

அவற்றில் பெருமளவில் மக்களைப் பாதிக்கும், தேர்தலில் ஆதிக்கம் செலுத்தவல்ல விஷயங்களை இந்த ஆய்வு முடிவுகளில் முன்வைக்கிறோம்.

உண்மைகள் அணிவகுக்கும் 40 நாட்கள்

மத்தியில் ஆட்சியை நிர்ணயிப்பதில், எப்போதுமே தமிழகத்துக்கு முக்கியப் பங்கு இருந்திருக்கிறது. தமிழகத்தின் கை ஓங்கி வளர்ந்துகொண்டேயிருக்கும் சூழலில், தமிழக வாக்காளர்களின் இன்றைய மனநிலையைச் சரியாகவே எங்கள் ஆய்வுகள் பதிவுசெய்திருக்கின்றன என்று நம்புகிறோம்.

ஒவ்வொரு வேட்பாளரும் சராசரியாக 10 லட்சம் வாக்காளர்களைச் சென்றடைய வேண்டிய நிகழ்வு இந்தத் தேர்தல். அவர்களிடம் வேட்பாளர்கள் எதை எதிர்கொள்வார்கள் என்பதை நம்முடைய ஆய்வு முடிவுகள் நாடிபிடித்துச் சொல்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொகுதி இங்கே உலா வரப்போகிறது. ஆக, 40 நாட்களில் புதுவை உட்பட 40 தொகுதிகள்.

ஆய்வு முடிவுகளை முடிந்தவரை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் அழகாகவும் தொகுத்து அளிக்கவிருக்கிறது ‘தி இந்து’. உங்கள் குரலை அச்சில் பார்க்கவும் உங்கள் தொகுதியின் கள நிலவரத்தை வார்த்தைகளில் பார்க்கவும் காத்திருங்கள். ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் புரிந்துகொள்ள உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு இது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x