Last Updated : 20 Dec, 2020 01:23 PM

 

Published : 20 Dec 2020 01:23 PM
Last Updated : 20 Dec 2020 01:23 PM

டெல்லி சீக்கிய குருத்வாராவில் மோடி வழிபாடு: போக்குவரத்துத் தடைகள், காவல்துறை பாதுகாப்பு எதுவும் இல்லை

டெல்லியில் உள்ள சீக்கியக் கோயிலான ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு பிரதமர் மோடி முன்னறிவிப்பு ஏதுமின்றி இன்று காலை (ஞாயிற்றுக்கிழமை) திடீர் விஜயம் செய்தார். குரு தேஜ் பகதூர் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தி, சீக்கிய முறைப்படி வழிபட்டார்.

டெல்லி எல்லைகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நடத்திவரும் போராட்டம் 24-வது நாளை எட்டியுள்ளது.

தொடர்ந்து போராட்டத்தைக் கைவிடும்படி வேண்டுகோள் வைத்துவரும் பிரதமர் மோடி, குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாய மண்டி முறை உள்ளிட்டவை தொடரும் என்பன உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை எடுத்துக்கூறி விளக்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை காலை ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு வருகை தந்திருப்பது டெல்லி மக்களை வியப்பில் ஆழ்த்தியது. குரு தேஜ் பகதூர் சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவாக இருந்தார். அவரது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இன்று காலை குருத்வாராவுக்கு விஜயம் செய்த மோடி அங்கு சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார்,

பிரதமர் மோடி ஆரஞ்சுத் துணியால் தலையை மறைத்து பிரகாசமான மஞ்சள் குர்தாவுடன் இடுப்பு கோட் அணிந்து சீக்கிய முறைப்படி குரு தேஜ் பகதூரை வழிபட்டார். பின்னர் சீக்கிய மதகுருக்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார். குருத்வாராவிலிருந்து வெளியே வந்தபோது சீக்கிய பக்தர்கள் பிரதமருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

இதற்காக காவல்துறை பாதுகாப்பு அல்லது போக்குவரத்து தடைகள் ஏற்படுத்தி டெல்லி மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

"இன்று காலை, வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாரா ரகப் கஞ்ச் சாகிப்பிற்குச் சென்று பிரார்த்தனை செய்தேன். அங்குதான் ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் புனித உடல் தகனம் செய்யப்பட்டது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டேன். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களைப் போலவே, நானும் ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் தயவால் ஆழமாக ஈர்க்கப்பட்டேன்.

ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் 400-வது பிரகாஷ் பர்வின் சிறப்பு நிகழ்வை நமது அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொண்டாடக் கிடைத்துள்ள வாய்ப்பு அவரது சிறப்புமிக்க கருணையே ஆகும். நமக்கு இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் வரலாற்றுரீதியான சந்தர்ப்பத்தில் ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் கொள்கைகளைக் கொண்டாடுவோம்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x