Published : 14 Jun 2014 09:47 AM
Last Updated : 14 Jun 2014 09:47 AM

மத்திய அமைச்சர் வி.கே.சிங் விலக மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதிய ராணுவ தளபதி நியமனத்தை வெளிப்படையாக ஆட்சேபிப்பதால் மத்திய அமைச்சர் வி.கே.சிங் பதவி விலகவேண்டும். இல்லையெனில் அவரை அரசு நீக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ பத்திரிகையில் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி எழுதியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நரேந்திர மோடி தலைமை யிலான அமைச்சரவையில் உள்ள இணை அமைச்சரும் முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங், புதிய ராணுவ தளபதியாக தல்பிர் சிங் சுஹாக் நியமிக்கப்பட்டுள்ளது பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்பாவிகளை கொன்றதாகவும் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் கிரிமினல் குற்றவாளிகளுக்கு அரணாக இருந்ததாகவும் புதிய ராணுவ தளபதியாக நியமிக் கப்பட்டுள்ளவர் மீது ட்விட்டரில் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக் கிறார் வி.கே.சிங்.

தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் வி.கே.சிங், புதிய ராணுவ தளபதி மீது கடுமையாக குற்றம்சாட்டி பேசி இருப்பது விபரீதங்களுக்குத்தான் வழி வகுக்கும்.

சங்கடத்துக்கு உள்ளான பாஜக அரசு புதிய ராணுவ தளபதி நியமனத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி மூலம் பேச வைத்துள்ளது.

நல்லாட்சி தரப்போவதாக உறுதி அளித்து பதவியில் அமர்ந்துள்ள பாஜக அரசை சோதிக்கப் போவதாகவே இந்த அசாதாரண சூழ்நிலை அமையப் போகிறது.

புதிய ராணுவ தளபதி நியமனம் சரியானதே என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அரசு நியாயப்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அமைச்சர் தனது நிலையிலிருந்து பின்வாங்க வேண்டும் அல்லது அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்ளவேண்டும்.

ராணுவ தளபதியாக இருந்தபோது வி.கே.சிங் எடுத்த ஒழுங்கு நடவடிக்கை அடிப்படை ஆதாரமின்றி எடுத்தது,இது சட்டத்துக்கு புறம்பானது என உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் கூறுவது அவரை கிட்டத்தட்ட கண்டிப்பதற்கு சமம் ஆகும்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இருந்தால் நிலைமை இயல்பாக இருக்கும் என பாஜக அரசு நம்ப முடியாது.

அரசின் ஆரம்பமே நடக்கக் கூடாதது நடக்கப் போகிறது என்பதை கோடிட்டு காட்டுவதாகவே உள்ளது. அவசரச் சட்டங்களை பிறப்பித்து நாடாளுமன்றத்தை ஓரங்கட்டியது. அவையில் அர்த்தமுள்ள விவாதம் நடத்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எனக்கு நினைவில் உள்ளபடி பார்த்தால் மிகக்குறுகிய காலம் நடந்த கூட்டத்தொடர் இதுவாகத்தான் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x