Last Updated : 25 Oct, 2015 10:14 AM

 

Published : 25 Oct 2015 10:14 AM
Last Updated : 25 Oct 2015 10:14 AM

பெண் எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்: கர்நாடகாவில் தொடரும் அச்சுறுத்தல்

மாட்டிறைச்சி சாப்பிட்ட கன்னட பெண் எழுத்தாளர் சேத்தனா தீர்த்தஹள்ளிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் பெங்களூரு போலீஸில் புகார் அளித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான சேத்தனா தீர்த்தஹள்ளி கன்னடத்தில் 5-க்கும் மேற்பட்ட புனைவு நூல்களை எழுதியுள்ளார். அவ்வப்போது இலக்கிய இதழ்களில் பெண் அடிமை, வரதட்சணை கொடுமை, சாதி கொடுமை ஆகியவற்றை எதிர்த்து கட்டுரைகளை எழுதி வருகிறார்.

நாட்டில் அதிகரித்துவரும் எழுத்தாளர்கள் மீதான வன்முறை, தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதாக இஸ்லாமிய முதியவர் கொல்லப்பட்ட விவகாரம், கோயிலுக்குள் நுழைந்த தலித் முதியவர் எரிக்கப்பட்ட விவகாரம் ஆகியவற்றை கண்டித்து தமது பேஸ்புக்கில் அவர் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். மேலும் கடந்த மாத‌ம் பெங்களூருவில் நடைபெற்ற மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்று மாட்டிறைச்சி சாப்பிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பல்வேறு இந்துத்துவா அடிப்படைவாதிகள் சேத்தனா தீர்த்தஹள்ளிக்கு பேஸ்புக் மூலமாகவும் செல்போன் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இன்னும் சிலர் முகத்தில் ஆசிட் வீசப்போவதாகவும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த மதுசூதன கவுடா பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில்,

‘‘இந்து மதத்தை அவமதித்து மாட்டிறைச்சி சாப்பிட்டதால் கல்புர்கியைப் போல சேத்தனா தீர்த்தஹள்ளியை கொலை செய்வேன்’’ என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சேத்தனா தீர்த்தஹள்ளி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹனுமந்த் நகர் காவல் நிலையத்தில் மதுசூதன கவுடாக்கு எதிராக புகார் அளித்தார். போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதித்ததால் நேற்று பெங்களூரு மாநகர துணை ஆணையர் லோகேஷ் குமாரை சந்தித்து புகார் அளித்தார்.

இதனை பெற்றுக்கொண்ட லோகேஷ் குமார்,

‘‘எழுத்தாளர் சேத்தனா தீர்த்தஹள்ளிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்த காவல் நிலையத்துக்கு உத்தர விடப்பட்டுள்ளது. போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்வார்கள்’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x