Last Updated : 11 Dec, 2020 04:37 PM

 

Published : 11 Dec 2020 04:37 PM
Last Updated : 11 Dec 2020 04:37 PM

விவசாயிகளின் பொறுமையைச் சோதித்துப் பார்க்காதீர்கள்: மத்திய அரசுக்கு சரத் பவார் எச்சரிக்கை

விவசாயிகளின் பொறுமையைச் சோதித்துப் பார்க்காதீர்கள். நாடு முழுவதும் போராட்டம் பரவும் முன், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் முடிவை விரைவாக எடுங்கள் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி-ஹரியாணா எல்லைப் பகுதிகளான திக்ரி, காஜிபூர், டெல்லி-நொய்டா எல்லையான சில்லா ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரிலும் வெளியிலும் போராட்டம் நடத்தி வருவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தீர்மானமாக உள்ளனர். வரும் 14-ம் தேதிக்குப் பின் நாடு முழுவதும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் விவசாயிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மும்பையில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''விவசாயிகளின் கோரிக்கைகள் மீது மத்திய அரசு உரிய நேரத்தில் முடிவெடுக்காவிட்டால், டெல்லி எல்லையில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் பரவக்கூடும்.

வேளாண் சட்டங்கள் மீது விரிவான விவாதம் நடத்தியபின் நிறைவேற்றலாம் என எதிர்க்கட்சிகள் கோரிய நிலையில், அவசரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது மிகுந்த கவலையளிக்கிறது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.

விவசாயிகள் இன்று உச்சகட்டமாக முதலில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள், அதன்பின் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கலாம் என்று கூறிவிட்டனர். ஆனால், மத்திய அரசு பிடிவாதமாக தம் நிலைப்பாட்டிலிருந்து மாற மறுக்கிறது. முடிவு சாதகமாகச் செல்வதாகத் தெரியவில்லை. இந்தப் பிரச்சினையில் சிக்கல் மேலும் சில நாட்களுக்கு நீடிப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

ஏறக்குறைய 700 டிராக்டர்களில் விவசாயிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து புறப்பட்டு டெல்லி எல்லைக்கு இன்று காலை வந்து சேர்ந்துள்ளனர். இந்தப் போராட்டம் டெல்லி எல்லையோடு தடுக்கப்படுகிறது. ஆனால், சரியான நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால், நாடு முழுவதும் போராட்டம் பரவுவதைத் தடுக்க முடியாது.

இந்த தேசத்துக்கு உணவு வழங்குபவர்கள் விவசாயிகள். அவர்களின் பொறுமையைப் பரிசோதித்துப் பார்க்காதீர்கள் என்று மத்திய அரசுக்கு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு நான் தலைவராக வரப்போகிறேன் எனச் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது உண்மைக்கு மாறான செய்தி. பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள்.

விவசாயிகள் போராட்டத்துக்குப் பின்புலத்தில் சீனாவும், பாகிஸ்தானும் உள்ளன என்று மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே பேசியதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. சிலருக்கு எங்கிருந்து பேசுகிறோம், எப்படிப் பேச வேண்டும், என்ன வேண்டும் என்ற அறிவு இல்லாமல் பேசுவார்கள். இதைப் பெரிதாக நினைக்காதீர்கள். இதுபோன்று பலமுறை இப்படி அவர் பேசியுள்ளார்''.

இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x