Published : 11 Dec 2020 07:29 AM
Last Updated : 11 Dec 2020 07:29 AM

தென்கிழக்கு ஆசிய நாடுகள் இடையே அமைதிக்கு சுயக் கட்டுப்பாடு மிகமிக அவசியம்: சீனாவுக்கு மறைமுகமாக ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

ஆசியான் கூட்டமைப்பில் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) இடம்பெற்றுள்ள உறுப்புநாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாடு (ஏடிஎம்எம் பிளஸ்)வியட்நாமில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

ஆசிய பிராந்தியத்தின் அமைதி,ஸ்திரத்தன்மைக்கான அச்சாணியாக ஆசியான் பாதுகாப்புத் துறைஅமைச்சர்கள் மாநாடு உருவாகியுள்ளது. இதனால் நாடுகளுக்கு இடையே தேவையற்ற மோதல்கள் உருவாவது முற்றிலுமாக தவிர்க்கப்படும். இதனை நாம் அனைவரும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய காலக் கட்டத்தில் நம் முன்பு ஏராளமான சவால்கள் நிறைந்துள்ளன. தீவிரவாதம், சர்வதேச விதிகளை மீறும் கலாச்சாரம், கடல்சார் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் உட்பட பல சவால்களை நாம் சமாளிக்க வேண்டியுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே இந்த சவால்களை நாம் வெற்றிக் கொள்ள முடியும்

குறிப்பாக, அனைத்து நாடுகளும் சுயக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒரு சில நாடுகள் (சீனாவை மறைமுகமாக குறிப்பிடுகிறார்) இவ்வாறு சுயக் கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல், எதிர் விளைவுகளை ஏற்படுத்த கூடிய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்த மனப்பான்மையை அந்த நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோல, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கு மட்டுமின்றி உலகம் முழுவதுக்குமே இன்று தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. தீவிரவாதத்தை வேரறுக்க இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் ஒன்று திரண்டுள்ள போதிலும், அது சாத்தியமாகவில்லை. ஒரு சில நாடுகளின் தீவிரவாத ஆதரவு கொள்கையே இதற்கு முக்கிய காரணம். இந்தியாவின் அண்டை நாடு கூட (பாகிஸ்தான்) இந்த நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற நாடுகளை ஆசியான் கூட்டமைப்பு அடையாளம் கண்டு அவற்றை தனிமைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x