Last Updated : 10 Dec, 2020 03:27 PM

 

Published : 10 Dec 2020 03:27 PM
Last Updated : 10 Dec 2020 03:27 PM

சாய்பாபா கோயிலில் ஆடைகுறித்து வேண்டுகோள் விடுக்கும் பலகையை அகற்றச் சென்ற திருப்தி தேசாய்; வழியிலேயே கைது

ஷிர்டி சாய்பாபா கோயிலில் ஆடைகுறித்து பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் பலகையை அகற்றுவதற்காகச்சென்ற சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் வழியிலேயே கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிராவின் அகமதுநகரில் திருப்தி தேசாய் மற்றும் அவரது அமைப்பைச் சேர்ந்த சிலரும் போலீஸாரால் வியாழக்கிழமை தடுத்துநிறுத்தப்பட்டனர்.

சமீபத்தில் ஷிர்டி சாய்பாபா கோயில் நிர்வாகம் கோவில் வளாகத்திற்கு வெளியே பலகைகளை அமைத்து, பக்தர்களை நாகரிக முறையில் அல்லது இந்திய கலாச்சாரத்தின் படி உடையணிந்து வருமாறு கேட்டுக்கொண்டது.

சிலர் ஆட்சேபனைக்குரிய ஆடைகள் அணிந்து சன்னதிக்கு வருவதாக புகார்கள் வந்ததாக அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், அறக்கட்டளையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி, அவர்கள் பக்தர்கள் மீது எந்தவிதமான ஆடைக் குறியீடும் விதிக்கவில்லை என்றும், பலகையில் குறிப்பிடப்பட்ட தகவல் ஒரு வேண்டுகோளாக மட்டுமே வைக்கப்பட்டதாகவும் தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, சர்ச்சைக்குரிய செய்தியைக் கொண்ட பலகைகள் அகற்றப்படாவிட்டால், பிற ஆர்வலர்களுடன் சேர்ந்து ஷிர்டிக்கு டிசம்பர் 10 ஆம் தேதி தாங்களே சென்று அகற்றப்போவதாக திருப்தி தேசாய் கோயில் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

செவ்வாயன்று,துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் கோவிந்த் ஷிண்டே, சட்டம் ஒழுங்கு நிலைமையை மேற்கோளிட்டு, தேசாய்க்கு நோட்டீஸ் அனுப்பினார். டிசம்பர் 8 நள்ளிரவு முதல் டிசம்பர் 11 நள்ளிரவு வரை அகமதுநகர் மாவட்டத்தில் ஷீர்டிக்குள் திருப்தி தேசாய் நுழைய வேண்டாம் எனவும் அதில் கேட்டுக்கொண்டார்.

ஆனால் திருப்தி தேசாய் இந்த அறிவிப்பை மீறி, சாய்பாபா கோயிலில் உள்ள பலகைகளை அகற்றுவதற்காக செல்ல முயன்றார். அவர் தனது 'பூமாதா பிரிகேட்' 20 உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை காலை புனேவிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து அகமதுநகர் காவல் கண்காணிப்பாளர் மனோஜ் பாட்டீல் கூறுகையில், ''மும்பை போலீஸ் சட்டத்தின் 68 வது பிரிவின் கீழ் புனே-அகமதுநகர் நெடுஞ்சாலையில் சுபா கிராமத்திற்கு அருகே 15 முதல் 16 உறுப்பினர்களுடன் தேசாயை நாங்கள் கைது செய்தோம்" என்று தெரிவித்தார்.

மகாராட்டிரத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதை எதிர்த்து இவரது பூமாதா பிரிகேட் அமைப்பினர் தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றனர். சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று 2018ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து பெண்ணிய ஆர்வலர் திருப்தி தேசாய், சபரிமலைக்கு செல்ல முயன்று வழியிலேயே தடுத்துநிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x