Last Updated : 05 Oct, 2015 10:21 AM

 

Published : 05 Oct 2015 10:21 AM
Last Updated : 05 Oct 2015 10:21 AM

பிஹார் சட்டப்பேரவை தேர்தல்: இடதுசாரிக் கூட்டணியில் சிக்கல் - 24 தொகுதிகளில் எதிர்த்துப் போட்டி

பிஹார் சட்டப்பேரவை தேர் தலில் இடதுசாரி கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ளது.

சிபிஐ, சிபிஎம் மற்றும் சிபிஐ எம்.எல் ஆகிய மூன்று கட்சிகள் சுமார் 24 தொகுதிகளில் ஒன்றையொன்றை எதிர்த்துப் போட்டியிடுகின்றன.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, இடதுசாரி கட்சிகள் ஒரு கூட்டணியாக போட்டியிடுகின்றன.

இக்கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) 91, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ எம்.எல்) 78, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ.எம்) 38, எஸ்.யூ.சி.ஐ 6, அகில இந்திய பார்வர்டு பிளாக் 5 மற்றும் புரட்சிகர சோசலிஸ்டு கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது எஞ்சிய 22 தொகுதிகள் பின்னர் பங்கீடு செய்யப்படும் என கூட்டணி அமைந்தபோது தெரிவிக் கப்பட்டது.

இதில், ருபோலி, இஸ்லாம்பூர், சராய்கன்ச், தீனாரா, விக்ரம், பர்ஹாம்பூர் மற்றும் தெஹரி தொகுதிகளில் சிபிஐ மற்றும் சிபிஐ எம்.எல் கட்சிகள் இரண்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதேபோன்று சுபவுலி, மஹராஜ்கன்ச், மோதிஹாரி, கஹல்காவ்ன், ஹசன்பூர், பக்ஸர், கும்ரார் தொகுதிகளில் சிபிஐ மற்றும் சிபிஎம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. சரய்யா, தம்தாஹா தொகுதிகளில் சிபிஎம் மற்றும் சிபிஐ எம்.எல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

மேலும் எட்டு தொகுதிகளிலும் இதுபோன்ற மோதல் உருவாகி உள்ளது. இதனால், இடதுசாரி கூட்டணியில் சிக்கல் உருவாகியுள்ளது.

ஓரிரு நாட்களில் நல்ல முடிவு

இது குறித்து சிபிஐ தேசிய செயற்குழு உறுப்பினர் ஜப்பார் ஆலம் ‘தி இந்து’விடம் கூறும் போது;

“இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக ஆறு இடதுசாரி கட்சிகள் பிஹாரில் ஒரே கூட்டணியாக இணைந்துள்ளதை நாங்கள் பெரும் சாதனையாகக் கருதுகிறோம். இதில், சில தொகுதிகளில் முறையான ஒதுக்கீடுகள் செய்யப்படாமல், ஒருவரை ஒருவர் எதிர்க்கும் வகையில் வேட்பாளர்களை நிறுத்தி இருப்பது உண்மைதான். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார்.

பிஹாரில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 49 தொகுதிகளுக்கான தேர்தலில் வேட்புமனு வாபஸ் பெறும் கடைசி தேதி முடிந்து விட்டது. இதில், 4 தொகுதிகளில் இடதுசாரி கூட்டணிகள் தங்களுக்குள் மோதுவதால் அக் கூட்டணியின் ஆதரவாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

2010 சட்டப்பேரவை தேர்தலில் சிபிஐ மட்டும் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது. 2005-ல் சிபிஐ 3, சிபிஎம் 1 மற்றும் சிபிஐ எம்.எல் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x