Last Updated : 22 Oct, 2015 04:19 PM

 

Published : 22 Oct 2015 04:19 PM
Last Updated : 22 Oct 2015 04:19 PM

நாய் மீது எவரேனும் கல்லெறிந்தால் மத்திய அரசை குறை கூறுவதா?- வி.கே.சிங் சர்ச்சைப் பேச்சு

ஹரியாணாவில் தலித் குழந்தைகள் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் வி.கே.சிங், மத்திய அரசை காக்கும் விதமாக தெரிவித்த கருத்து ஒன்று கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உ.பி.யில் உள்ள காஸியாபாத்தில் வி.கே.சிங் கூறும்போது, "உள்ளூர் சம்பவங்களை மத்திய அரசுடன் தொடர்புபடுத்த வேண்டாம். விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்பங்களுக்கு இடையே தகராறுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே தகராறு... அது எப்படி உருவானது, அதன் பிறகு நடந்தது என்ன? நிர்வாகம் எங்கு தோல்வியடைந்தது.. இவற்றையெல்லாம் பரிசீலனை செய்த பிறகு மத்திய அரசிடம் அரசிடம் வாருங்கள்.

ஒவ்வொரு விவகாரத்துக்கு மத்திய அரசை சாடுவதா? உதாரணமாக, யாராவது நாயின் மீது கல்லை விட்டெறிந்தால் அதற்கும் மத்திய அரசே பொறுப்பு என்பதா? விஷயம் அவ்வாறில்லை” என்று கூறினார்.

இதனையடுத்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுஜ்ரேவாலா டெல்லியில் கூறும்போது, “இது கண்டனத்துக்குரிய கருத்து, அதிர்ச்சிகரமான கருத்து, மனிதத் தனமையற்ற பேச்சு, தலித் சமுதாயத்தினரை மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியர்களையும் அவரது பேச்சு புண்படுத்தியுள்ளது. தலித்துகளை காயப்படுத்தும் மோடி அரசின் மனநிலையை இது விளக்குகிறது.

இரண்டு குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதை நாயை கல்லால் அடிப்பதுடன் ஒப்பிடுவது எவ்வளவு கண்டிக்கத்தக்கது? அரசின் மனநிலையை இது பறைசாற்றுகிறது” என்றார் அவர்.

ஆனால், பரிதாபாத் சம்பவத்தை குறித்து தான் இந்த உதாரணத்தைக் கூறவில்லை என்று வி.கே.சிங் தற்போது பின்வாங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x