Published : 06 Oct 2015 11:40 AM
Last Updated : 06 Oct 2015 11:40 AM

பெங்களூருவில் ஓடும் வேனில் இளம்பெண் பலாத்காரம்

பெங்களூருவில் ஓடும் வேனில் 22 வயது பெண் ஒருவர் அந்த வேன் ஓட்டுநர் மற்றும் கிளீனரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

2012-ல் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பலியான சம்பவத்தின் கோரம் யாராலும் மறக்க முடியாது.

இந்நிலையில், பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை இரவு பி.பி.ஓ. மையத்தில் வேலை செய்யும் 22 வயது பெண் ஒருவர் ஓடும் வேனில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் என்.எஸ்.மெகாரிக் கூறும்போது, "கடந்த சனிக்கிழமையன்று, பெங்களூருவின் பொம்மனஹள்ளி எனும் பகுதியில் தனது நண்பருடன் காத்திருந்தார் அப்பெண். அவர்கள் இருவரும் மடிவாலா செல்ல வேண்டும். ஆட்டோவுக்காக காத்திருந்தனர்.

நீண்ட நேரமாகியும் ஆட்டோ ஏதும் வரவில்லை. அப்போது அவ்வழியில் ஒரு வேன் வந்துள்ளது. அந்த வேனில் இருந்த டிரைவர் அப்பெண்ணை மடிவாலாவில் இறக்கிவிடுவதாகக் கூறியிருக்கிறார். ஆனால், அப்பெண்ணின் நண்பரோ வேனில் நிறைய ஆட்கள் இல்லாததால் அதில் ஏற வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். நேரமாகிவிட்டதால் வேறு வாகனம் வருமா என்பது தெரியாது.

எனவே அந்த வாகனத்திலேயே சென்றுவிடுவதாக அப்பெண் வற்புறுத்தியுள்ளார். பின்னர் வேனில் ஏறியுள்ளார். சுமார் 1.30 மணியளவில் தனது அறைக்கு வந்த அப்பெண் தனது தோழிகளிடம் ஓடும் வேனில் தன்னை இரண்டு பேர் பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறியுள்ளார். அவரை உடனடியாக செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு அவரது தோழிகள் அழைத்துச் சென்றனர்.

வேன் டிரைவரும், கிளீனரும் சேர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்றரை மணி நேரம் அங்கிங்கு என சுற்றித்திரிந்து அப்பெண்ணை மாறி மாறி இருவரும் பலாத்காரம் செய்துள்ளனர். அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்" என்றார். இந்தச் சம்பவம் டெல்லி பலாத்கார சம்பவம் பாணியில் நடைபெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், "வேன் டிரைவரையும், கிளீனரையும் பிடிக்க தனிப்படைகள் அமைத்துள்ளதாகவும். வேன் பயணித்த வழியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருவதாகவும். விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம்" என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x