Published : 26 Mar 2014 04:22 PM
Last Updated : 26 Mar 2014 04:22 PM

காஷ்மீர் விவகாரத்தில் வாஜ்பாய் கொள்கைகளை பின்பற்றுவோம்: நரேந்திர மோடி உறுதி

காஷ்மீரின் தலையெழுத்தை மாற்றியமைக்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடைபிடித்த கொள்கைகளை பின்பற்றுவோம் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உறுதி கூறினார்.

ஜம்மு அருகில் உள்ள ஹிரா நகரில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசுகையில், "காஷ்மீர் விவகாரத்தில் வாஜ்பாய் கடைப்பிடித்த மனிதநேயம், ஜனநாயகம், காஷ்மீரின் தனித்தன்மை ஆகிய கொள்கைகளை நாங்கள் பின்பற்றுவோம். வாஜ்பாய் அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்திருந்தால் காஷ்மீர் முகத்தையே மாற்றி அமைத்திருக்கும். இங்கு பிரச்சினைகள் தீர்ந்திருக்கும்" என்றார்.

காஷ்மீரின் ஆளும் தேசிய மாநாடு கட்சி, எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி, மிர்வைஸ் உமர் பரூக் தலைமையிலான ஹுரியத் மாநாடு ஆகிய கட்சிகள், காஷ்மீரில் முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முன்முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், மோடி இவ்வாறு கூறினார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்ட 370-வது பிரிவு குறித்து மோடி இம்முறை ஏதும் பேசவில்லை. மேலும் இப்பிரிவு தொடர்பான விவாதத்துக்கு தயாரா என அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா விடுத்திருந்த சவாலுக்கும் மோடி பதில் அளிக்கவில்லை.

ஜம்முவில் மோடி பேசுவது இது இரண்டாது முறை. இதற்கு முன் கடந்த ஆண்டு டிசம்பரில் இங்கு பேசிய மோடி, 370வது பிரிவு தொடர்பாக விவாதம் நடத்தப்படவேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். என்றாலும் இது தொடர்பாக உமர் அப்துல்லா விடுத்த சவாலுக்குப் பிறகு பாஜகவோ, மோடியோ இப்பிரச்சினையை திரும்ப எழுப்பவில்லை.

அந்தோனியும் கேஜ்ரிவாலும் பாகிஸ்தான் ஏஜெண்ட்

கூட்டத்தில் மோடி மேலும் பேசுகையில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகிய இருவரும் பாகிஸ்தானின் முகவர்கள், இந்தியாவின் எதிரிகள் என்று குறிப்பிட்டார்.

"பாகிஸ்தானுக்கு 3 ஏ.கே.க்கள் வலு சேர்க்கின்றன. ஒன்று ஏ.கே. 47. இதன்மூலம் காஷ்மீரில் ரத்த ஆறு ஓடச்செய்ய முடிகிறது. அடுத்தது ஏ.கே.அந்தோனி. எல்லையில் இந்திய வீரர்கள் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டதாக நமது ராணுவம் கூறுகிறது. ஆனால் "பாகிஸ்தான் ராணுவத்தின் உடையணிந்து வந்த சிலர்" என்று நாடாளுமன்றத்தில் ஏ.கே.அந்தோனி கூறுகிறார். இதுபோன்ற வார்த்தைகள் யாருக்கு பயனுள்ளதாக இருக்கும்?

மூன்றாவது ஏ.கே., அர்விந்த் கேஜ்ரிவால். இக்கட்சி இணைய தளத்தில் இடம்பெற்றுள்ள வரைபடத்தில் பாகிஸ்தானின் பகுதியாக காஷ்மீர் காட்டப்பட்டுள்ளது. காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று இக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகிறார். இதைக் கேட்ட பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சியில் ஆடுகின்றனர்.

பாகிஸ்தானின் முகவர்களான இவர்கள், இந்தியாவின் எதிரிகள். பாகிஸ்தான் பேசுவதை இவர்கள் பேசுகின்றனர்.ஜனசங்கத்தின் நிறுவனர் ஷர்மா பிரசாத் முகர்ஜி, ஜம்மு காஷ்மீருக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தார். எண்ணற்ற இந்திய வீரர்கள் இம்மண்ணில் உயிர் தியாகம் செய்துள்ளனர். இது எந்தவொரு போரிலும் இறந்தவர்களை காட்டிலும் அதிகம்" என்றார் மோடி.

இக்கூட்டத்தில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியும், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் முனைப்புடன் செயல்பட்டவருமான பரூக் கான் பாஜகவில் இணைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x