Published : 01 Dec 2020 03:15 am

Updated : 01 Dec 2020 06:53 am

 

Published : 01 Dec 2020 03:15 AM
Last Updated : 01 Dec 2020 06:53 AM

உள்ளாட்சித் தேர்தலில் போட்டிப் போட்டுக் கொண்டு கேரளாவில் இளம்பெண்களை களம் இறக்கும் அரசியல் கட்சிகள்

kerala-local-election
மார்க்சிஸ்ட் வேட்பாளர்

திருவனந்தபுரம்

கேரளாவில் வரும் 8, 10, 14-ம் தேதிகளில் 3 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது.மொத்தமுள்ள 14 மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது. வழக்கமாக உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து வந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ, இளைஞர் அமைப்பான டிஒய்எப்.யை சேர்ந்தோருக்கு அதிகளவில் வாய்ப்பு கிடைத்து வந்தது. இதனால் கேரளத்தில் அடுத்தடுத்த தலைமுறையில் மார்க்சிய சிந்தனையாளர்களும் உருவாகிக் கொண்டிருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக கட்சிகளும் அதிகளவில் இளம்பெண்களை வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளன. அதனால், கேரளத்தில் சகல கட்சிகளும் அழகிப் போட்டி நடத்துவது போல் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


எர்ணாக்குளம் மாவட்டம், மூவாட்டுப்புழா நகராட்சியைச் சேர்ந்த மீனாட்சி தம்பி, அந்த மாவட்டத்தின் மிக வயது குறைந்த வேட்பாளர் ஆவார். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் இவர், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினராக உள்ளார். இதேபோல் அருவாப்புலம் பஞ்சாயத்தில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த ரேஸ்மா மரியம் ராய், கடந்த 18-ம் தேதி தான் 21 வயதை எட்டினார். 19-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த அளவுக்கு இளம்பெண்களை தேடி தேடி களத்துக்கு அழைத்து வந்துள்ளது மார்க்சிஸ்ட் கட்சி. கேரளத்தில் பாஜக முன்னெடுத்த சபரிமலை போராட்டம் ஏற்கெனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட்டை படுதோல்வி அடைய வைத்தது.

அதன் பலனை பாஜக.வால் அறுவடை செய்ய முடியவில்லை. வாக்குகள் காங்கிரஸ் பக்கம் திரும்பின. இந்த முறையும் பாஜக.வால் சேதாரம் உருவாகக் கூடும் என கணித்திருக்கும் மார்க்சிஸ்ட் அதிக எண்ணிக்கையில் இளம்பெண்கள், இளைஞர்களை களத்தில் இறக்கியுள்ளது.

பாஜகவைப் பொறுத்த வரை மாணவர் அமைப்பான ஏபிவிபி, அந்தந்தப் பகுதிகளில் சமய வகுப்பு கூட்டங்களை நடத்தும் இளம்பெண்கள், கோயில்களில் குத்துவிளக்கு உள்ளிட்ட விசேஷங்களை முன்நின்று நடத்தும் பெண்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்து வேட்பாளராக களத்தில் இறக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியும் இதேபோல் இளம்பெண்களாகக் களத்தில் இறக்கியுள்ளது.

இதுகுறித்து கேரளத்தின் அரசியல் விமர்சகர் கோபிநாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

இளம்பெண்களை அதிக எண்ணிக்கையில் களம் இறக்குவது ஆரோக்கியமான போக்குதான். பொதுவாகவே பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கும் போது கணவர்கள் பின்னால் இருந்து இயக்குவார்கள் என்ற விமர்சனம் உண்டு. ஆனால், இளவயது, படித்தப் பெண்களை களம் இறக்கும் போது அதற்கான வாய்ப்பு குறைவு.

படித்தவர்களும், இளைய தலைமுறையும் அரசியலுக்கு வரவேண்டும் என ஒவ்வொருவரும் பேசுகிறோம். அதற்கு முன்னுதாரணமாக ஆகியிருக்கிறது கேரளம். இது வரவேற்கத்தக்க அம்சம்தான். மற்றபடி, இன்று சமூகவலைதளங்கள் உச்சகட்ட வளர்ச்சியை எட்டியிருக்கின்றன. அதனால் வெறுமனே ரசிக மனநிலையில் தேர்தலை அணுகுபவர்கள் அழகிப்போட்டி அளவுக்கு புகைப்படத் தொகுப்புகளாக்கி வைரல் ஆக்கியுள்ளனர். என்னைக் கேட்டால், இளம்பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பது அரசியல் ரீதியாக சித்தாந்தத்தை துடிப்போடு வைக்க உதவும்.

இவ்வாறு கோபிநாத் கூறினார்.

இதனிடையே திருவனந்தபுரத்தின் பாப்பனக்கோடு வேட்பாளர் ஆஷாநாத், கீர்த்தி ராஜேஷ், டி.என்.சரண்யா, அனு எலிசபெத் ஜேக்கப், அத்வைதா, ஜெயசித்ரா, விவிதா பாபு, ஸ்ருமி சாகுல், புண்யா சதீஸ், சொப்ணா ஆகிய வேட்பாளர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சில வேட்பாளர்கள் தங்களின் பெயரில் ஏதோ ஒரு பெண்ணின் புகைப்படம் பரவி வருவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.


உள்ளாட்சித் தேர்தல்கேரளாஇளம்பெண்களை களம் இறக்கும் அரசியல் கட்சிகள்Kerala local election

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x