Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

கப்பல் படைக்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் ‘வாகீர்’ நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகம்

கப்பல் படைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘வாகீர்’ நீர்மூழ்கிக் கப்பல், மும்பையில் நேற்று தனது பயணத்தைத் தொடங்கியது. பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பாத் நாயக், காணொலி காட்சி வழியாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். படம்: பிடிஐ

புதுடெல்லி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5-வது தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் ‘வாகீர்’ கப்பல் படையில் முறைப்படி இணைக்கப்பட்டது.

பிரான்ஸ் கப்பல் படை மற்றும் டிசிஎன்எஸ் நிறுவனத்துடன் இணைந்து தாக்குதல் திறன் படைத்த கல்வரி ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. ‘இந்திய கப்பல் படை புராஜெக்ட்-75’ திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே தயாரிக்க முடிவானது. தற்போது கல்வரி, கந்தேரி, கரன்ஜி, வேலா ஆகிய 4 நீர்மூழ்கி கப்பல்கள் இந்திய கப்பல் படையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 5-வது நீர்மூழ்கிக் கப்பல் வாகீர் நேற்று முறைப்படி இந்திய கப்பல் படையில் இணைக்கப்பட்டது.

மும்பையில் உள்ள அரசுக்கு சொந்தமான மசாகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வாகீர் நீர்மூழ்கிக் கப்பல் இணைப்பு விழா நேற்று நடைபெற்றது. பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பாத் நாயக்கின் மனைவி விஜயா நாயக், காணொலி காட்சி மூலம் கப்பலை தொடங்கி வைத்தார். தற்போது கோவாவில் உள்ள அமைச்சர் பாத், அங்கிருந்து காணொலி காட்சி மூலம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

கல்வரி ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒவ்வொன்றும் பல்வேறு தாக்குதல் திறன்கள் படைத்தவை. தற்போது கப்பல் படையில் இணைக்கப்பட்டுள்ள 5-வது வாகீர் கப்பல், நீருக்குள் இருந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் உட்பட பல தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. நீரில் இருந்து நிலத்தில் உள்ள எதிரி இலக்கை தாக்குதல், பல கிலோ மீட்டர் தூரம் கண்காணித்தல், உளவு பார்த்தல் போன்ற பல வேலைகளை இந்த நீர்மூழ்கி செய்யும். இது கடலுக்கு அடியில் இயங்கும் போது ஓசை அவ்வளவாக வராது.

இந்திய பெருங்கடல் பகுதியின் ஆழத்தில் வாழும் ‘சேண்ட்பிஷ்’ என்ற மீனின் பெயரில் ‘வாகீர்’ என்று இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற முதல் நீர்மூழ்கிக் கப்பல் கடந்த 1973-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி ரஷ்யாவில் இருந்து வாங்கி இந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட்டது. முப்பது ஆண்டுகள் பணியாற்றிய அந்தக் கப்பல் கடந்த 2001-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

வாகீர் கப்பல் தற்போது செயலுக்கு வந்துள்ளதால், இந்திய கப்பல் படையின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. இந்திய கடல் பகுதிகள் பாதுகாப்புக்கு இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் பெரும் அரணாக உள்ளன. 6-வது மற்றும் கடைசி நீர்மூழ்கிக் கப்பல் வக் ஷீர் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று மசாகா கப்பல் கட்டும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x