Last Updated : 17 Oct, 2015 06:58 PM

 

Published : 17 Oct 2015 06:58 PM
Last Updated : 17 Oct 2015 06:58 PM

பெங்களூருவில் அதிகரிக்கும் பலாத்கார சம்பவங்கள் குறித்து பாஜக தலைவர் ஈஸ்வரப்பா கருத்தால் சர்ச்சை: காங்கிரஸ் கட்சி, மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம்

பெங்களூருவில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளரை அவமதிக்கும் வகையில் பாஜக மூத்த‌ தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ், மஜத உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் பல்வேறு மகளிர் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பெங்களூரு அருகே பைக் திருடர்களால் கொல்லப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதிஷின் இறுதிச் சடங்கில் பாஜக மூத்த தலைவரும் கர்நாடக சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவருமான கே.எஸ். ஈஸ்வரப்பா கலந்து கொண்டார். அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவிடம், ''பெங்களூருவில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு யார் காரணம்? பாலியல் பலாத்கார சம்பவ‌ங்களை கண்டித்து எதிர்க்கட்சியான பாஜக கடும் போராட்டத்தை நடத்தாமல் இருப்ப‌து ஏன்?'' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு கே.எஸ். ஈஸ்வரப்பா, ‘‘தற்போது நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள்... உங்களை யாராவது பாலியல் பலாத்காரம் செய்து விட்டால் நான் என்ன செய்ய முடியும்? இல்லை எதிர்க்கட்சிகள் தான் என்ன செய்ய முடியும்?'' என பதில் அளித்தார். இதனால் அங்கிருந்த பெண் பத்திரிகையாளர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பாஜக மூத்த தலைவரான ஈஸ்வரப்பாவின் கருத்து கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் பொறுப்புள்ள அரசியல் வாதியாக எப்படி நடந்துக் கொள்வது என்று தெரியாமல் ஆணாதிக்கத்துடன் பேசியுள்ளார். அறிவ‌ற்ற முறையில் பேசியுள்ள அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என சமூக ஆர்வலர் கள் வலைத்தளங்களில் பதிவிட்டுள் ளனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இதே போல கர்நாடக காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் லஷ்மி ஹெபால்கர் கூறிய போது, “பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்த எதிர்க்கட்சித் தலைவரான ஈஸ்வரப்பாவின் கருத்து ஏற்கத்தக்கது அல்ல. பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த அவரை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து பாஜக மேலிடம் உடனடியாக நீக்க வேண்டும். பொது வாழ்வில் இருப்பதற்கே தகுதியற்ற ஈஸ்வரப்பாவை கண்டித்து காங்கிரஸ் மகளிர் அணி சார்பாக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என்றார்.

இதேபோல மதச்சார்பற்ற ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனிடையே பாஜக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவ ருமான ஜெகதீஷ் ஹெட்டரிடம் ஈஸ்வரப்பாவின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப் பினர். அப்போது, “ஈஸ்வரப் பாவின் பேச்சு பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத் தியுள்ளது. மூத்த தலைவரான அவர் இவ்வாறு பேசுவது மிக மிகத் தவறானது. கடந்த காலங்களில் இது போன்ற கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்ட ஈஸ்வரப்பா அதில் இருந்து பாடம் கற்கவில்லை'' என்றார்.

இந்நிலையில் ஈஸ்வரப்பா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி பெங்களூருவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் புகார் அளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x