லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து: தெலங்கானாவில் 6 பயணிகள் உயிரிழப்பு

லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து: தெலங்கானாவில் 6 பயணிகள் உயிரிழப்பு
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், சூரியாபேட்டை மாவட்டத்தில் இரும்பு லோடோடு நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம், இன்று காலை ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து வேகமாக மோதிய விபத்தில் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த 5 பெண்கள் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பயணிகள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் ஏலூரு நேக்கி நேற்றிரவு 42 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் சொகுசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. காலை 9 மணியளவில் சூரியாபேட்டை கோதாடா எனும் ஊருக்கு செல்ல வேண்டிய சொகுசு பேருந்தை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்ல ஓட்டுநர் பேருந்தை அதிவேகமாக இயக்கியுள்ளார். இன்று அதிகாலை 4 மணியளவில் கோதாடா அருகே துவாரகுண்டா எனும் இடத்தில் அதிவேகமாக சென்ற பேருந்து சாலை வளைவில் திருப்ப முயன்று, முன்னால் இரும்பு லோடுடுன் பழுதாகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த என்டிஆர் மாவட்டத்தை சேர்ந்த சின்னா (32), விஜயவாடாவை சேர்ந்த ஜோஷ்னா (29), நாகேந்திர பாபு ((21), ஷாஹினா (30), பாவனா, லட்சுமி ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் கோதாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் மல்லிகார்ஜுனா தலைமறைவாகி உள்ளார்.

கோதாடா போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் மல்லிகார்ஜுனா தூக்க கலக்கத்தில் இருந்ததாகவும், அதிவேகமாக பேருந்தை இயக்கியதாலும் தான் விபத்து நடந்தது என்பது தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து கோதாடா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள் இரங்கல்- இதனிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், ஆந்திர கல்வித்துறை அமைச்சர் லோகேஷ் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படி ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து: தெலங்கானாவில் 6 பயணிகள் உயிரிழப்பு
அத்திவரதர் ஆனந்த சரஸ் குளத்தை திறக்க கோரிய வழக்கு: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in