வாடிக்கையாளர் தகவல் பாதுகாப்பு விதி மீறல் பிக் பாஸ்கெட் நிறுவனம் மீது வழக்கு தொடர வாய்ப்பு: 2 கோடி பேருடைய தகவல் கசிந்ததாக புகார்

வாடிக்கையாளர் தகவல் பாதுகாப்பு விதி மீறல் பிக் பாஸ்கெட் நிறுவனம் மீது வழக்கு தொடர வாய்ப்பு: 2 கோடி பேருடைய தகவல் கசிந்ததாக புகார்
Updated on
1 min read

ஆன்லைன் மூலம் மளிகைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள பிக் பாஸ்கெட் நிறுவனம் மீது வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை கசிய விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தை பயன்படுத்திய 2 கோடி வாடிக்கையாளர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. இதுதொடர்பாக சிப்ளே நிறுவனம் புகார் பதிவு செய்துள்ளது.

பெங்களூரு காவல் நிலையத்தில் சைபர் குற்றப் பிரிவில் இது தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள உண்மைத் தன்மையை சைபர் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். பிக் பாஸ்கெட் நிறுவனத்தின் இணையதளத்தில் ஊடுருவி வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை திருடி அதை ரூ.30 லட்சத்துக்கு விற்றுள்ளதாக சிப்ளே நிறுவனம் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.

இணையதளத்தில் வழக்கமான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, பிக் பாஸ்கெட் நிறுவனத்தின் தகவல்கள் திருடப்பட்டு, சைபர் குற்றம் புரிவோர் சந்தையில் 40 ஆயிரம் டாலருக்கு விற்றுள்ளது தெரிய வந்துள்ளது. வாடிக்கையாளர் பற்றிய தகவல் தொகுப்பானது மெம்பர்-மெம்பர் என்ற சங்கேத பெயரில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் தொகுப்பின் அளவு 15 ஜிபி ஆகும். இதில் 2 கோடி வாடிக்கையாளர் பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளதாக சிப்ளே குறிப்பிட்டுள்ளது.

இந்த தகவலில் வாடிக்கையாளர்களின் பெயர் இணையதள முகவரி, சங்கேத எண், தொடர்பு எண் (மொபைல் எண்), முகவரி, பிறந்த நாள், இடம், பதிவு செய்யப்பட்ட முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இதில் தரப்பட்டுள்ளன.

கடவுச் சொல் (பாஸ்வேர்டு) குறித்த தகவலில், நிறுவனம் அளிக்கும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய கடவுச் சொல் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இது ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மாறுதலுக்கு உட்பட்டது என்றும் சிப்ளே தெரிவித்துள்ளது.

பிக்பாஸ்கெட் நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் அலிபாபா குழுமம், மிரே அசெட் நெவர் ஏசியா குரோத் பண்ட், மற்றும் இங்கிலாந்து அரசு நிறுவனமான சிடிசி குழுமமும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in