Published : 02 Nov 2020 07:36 PM
Last Updated : 02 Nov 2020 07:36 PM

தன்னை வீடியோ எடுத்துப் பிரபலமாக்கியவர் மீது பண மோசடி வழக்கு: 'பாபா கா தாபா' விவகாரத்தில் சர்ச்சை  

காந்தா பிரசாத், அவரது மனைவி பதாமி தேவி. | படம்: பிடிஐ

டெல்லியில் பாபா கா தாபா உணவகத்தின் 80 வயது உரிமையாளர், தன்னை வீடியோ எடுத்து யூடியூபில் பகிர்ந்து பிரபலமாக்கியவர் மீது மோசடி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

டெல்லி மாளவியா நகரில் வசிப்பவர் 80 வயது முதியவர் காந்தா பிரசாத், 'பாபா கா தாபா' என்ற பெயரில் தகரக் கொட்டகையில் சிறிய உணவகம் நடத்தி வருகிறார். அவரும் அவரது மனைவி பதாமி தேவியும் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உணவகத்தை நடத்தி வருகின்றனர். கரோனா நெருக்கடியால் கடந்த சில மாதங்களாகப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. வருமானம் இல்லாத நிலையில் தொழிலைக் கைவிடாமல் தொடர்ந்து உணவகம் நடத்தி வருகின்றனர்.

அக்டோபர் 7-ம் தேதி அன்று கவுரவ் வாசன் என்ற தன்னார்வச் செய்தியாளர், முதியவர் காந்தா பிரசாத்தின் உணவகத்துக்குச் சென்றார். சுவையான உணவு வகைகள், பிரபல ஓட்டல்கள் குறித்த செய்திகளைத் திரட்டி சமூக வலைதளங்களில் வெளியிடும் அவர், காந்தா பிரசாத் நடத்தி வரும் 'பாபா கா தாபா' உணவு வகைகள் குறித்துக் கேட்டறிந்தார். அவை குறித்து முழுமையாக வீடியோவில் பதிவு செய்து அனைத்துச் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார்.

வீடியோவில் முதியவர் காந்தா பிரசாத்தின் அழுகையைக் கண்ட டெல்லி மக்கள் திரண்டு சென்று அவருக்கு ஆதரவு அளித்தனர். மேலும், கவுரவ் மூலமாகப் பலரும் நிதி அனுப்ப ஆரம்பித்தனர். அப்படி அனுப்பப்பட்ட பணம் தனக்கு முழுதாக வரவில்லை என்றும், தன் சார்பாக நிதி திரட்டி கவுரவ் மோசடி செய்துள்ளார் என்றும் கவுரவ் வாசனுக்கு எதிராக முதியவர் காந்தா பிரசாத் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தனக்கு வந்த நிதியுதவி குறித்த எந்த விவரங்களையும் கவுரவ் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் காந்தா பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் கவுரவ், முதியவருக்காக அளிக்கப்பட்ட பணம் அத்தனையையும் தான் தந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதுகுறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை நடைபெறவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x