Published : 27 May 2014 02:53 PM
Last Updated : 27 May 2014 02:53 PM

பேசி தீர்க்கத் தயார்: மோடியிடம் நவாஸ் உறுதி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் டெல்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து ஷெரீபிடம் மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த நவாஸ் ஷெரீப், அனைத்து விவகாரங்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் தயாராக உள்ளதாக உறுதியளித்தார்.

மோடி யோசனை

இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் நிருபர்களிடம் விவரித்துக் கூறியதாவது:

இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பின்போது 2012 செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட அரசியல், பொருளாதார உடன் படிக்கையின்படி இருநாடுகளி டையே வணிகப் போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம் என்று மோடி யோசனை கூறினார்.

ஷெரீப் அழைப்பு

மேலும் மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தான் மண்ணில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் மோடி கேட்டுக் கொண்டார்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் தயாராக இருப்பதாக நவாஸ் ஷெரீப் உறுதியளித்தார்.

இஸ்லாமாபாத்துக்கு வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார். இதனை மோடி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு சுஜாதா சிங் தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரம்

காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தையில் விவாதிக் கப்பட்டதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சுஜாதா சிங், விரைவில் இருநாட்டு வெளியுறவுச் செயலாளர்கள் சந்தித்துப் பேசி அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வார்கள் என்றார்.

தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து ஷெரீபிடம் வலியுறுத்தப்பட்டதா என்று நிருபர்கள் கேட்டபோது, இருநாட்டுத் தலைவர்களின் பேச்சு வார்த்தையின்போது தீவிரவாதம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. எனினும் அதுகுறித்து விரிவாகப் பேச முடியாது என்று சுஜாதா சிங் தெரிவித்தார்.

நவாஸ் விருப்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் நவாஸ் ஷெரீப் கூறியதாவது:

இந்திய, பாகிஸ்தான் உறவில் இப்போது புதிய பக்கம் திருப்பப்பட்டுள்ளது. இருநாடு களையும் சேர்ந்த 150 கோடி மக்களும் வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை மட்டுமே விரும்புகின்றனர்.

இந்தப் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும். அப்போதுதான் இருநாடுகளும் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும். அதற்காக இரு நாடுகளும் இணைந்து அமைதியை நிலைநாட்ட பாடுபட வேண்டும்.

இப்போதுள்ள அனைத்து பாதகங்களையும் நமக்கு சாதகங் களாக மாற்ற வேண்டும். இவ்வாறு நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x