Last Updated : 15 Sep, 2015 08:14 PM

 

Published : 15 Sep 2015 08:14 PM
Last Updated : 15 Sep 2015 08:14 PM

தமிழர்களுக்கு போதிய அதிகாரம் அளிக்க இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிசீலனை

இலங்கையில் தமிழர்களுக்கு போதிய அரசியல் அதிகாரம் அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

3 நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

அப்போது மீனவர் பிரச்சினை, தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு சிக்கலான விவகாரம் பற்றி இரு தலைவர்களும் விரிவாக பேச்சு நடத்தினர்.

இந்த பேச்சின்போது இருதரப்புக்கும் இடையே தீவிரவாதத்தை ஒடுக்குவது, இரு அண்டை நாடுகளின் கடல்பகுதியை பாதுகாப்பது உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நரேந்திர மோடியும் ரணில் விக்ரமசிங்கவும் ஒப்புக்கொண்டனர்.

முன்னதாக இரு தரப்பு பிரதிநிதிகள் நிலையில் முறைப்படி பேச்சு நடந்தது. சுகாதாரப் பாதுகாப்பு, விண்வெளி அறிவியலில் ஒத்துழைப்பை அதிகரிக்க வகை செய்யும் 4 ஒப்பந்தங்களில் இரு தரப்பும் கையெழுத்திட்டன. இதைத் தொடர்ந்து இருநாடுகளும் உறவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உறுதியாக உள்ளதாக கூட்டாக மோடியும் ரணிலும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

பின்னர் மோடி கூறியது: 4-வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் முதல் நாடாக இந்தியாவை தேர்ந்தெடுத்து இங்கு வந்துள்ளதற்கு நன்றி. நல்லிணக்க நடவடிக்கைகளை நேர்மையாக அமல்படுத்தி தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் ஒன்றுபட்ட இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம்மிக்க வாழ்வு பெற வழிவகை செய்ய வேண்டும்.

தீவிரவாதத்தை ஒடுக்கவும் இருநாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளும் தமது பிரச்சினைகளையும் பாதுகாப்பாக இருப்பதன் அவசியத்தை புரிந்து கொண்டு ஒன்றுக்கு ஒன்று ஒத்துழைப்பாக இருப்பது முக்கியம்.

பாதுகாப்பு பயிற்சி திட்டத்தில் மிகப்பெரிய கூட்டாளி நாடாக இருப்பது இலங்கை. இந்த ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்படும்.

மீனவர் பிரச்சினை

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இரு தரப்பு மீனவர் சங்கங்களும் தொடர்ந்து முயற்சி செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய பிரச்சினை என்பதால் இதை மனிதநேய நோக்கில் அணுகும்படி இலங்கை பிரதமரிடம் நான் வலியுறுத்தி உள்ளேன்.

இலங்கையின் முன்னேற்றம், இவ்விரு நாடுகளுக்கும் தெற்காசியாவுக்கும் நமது கடல் பிராந்தியத்துக்கும் முக்கியமானது.

நமது வெற்றி, நமது ஸ்திரத்தன்மை, இந்த பிராந்தியத்தின் வளர்ச்சி ஆகியவற்றால் இலங்கை, இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு கிடைக்கும்.

இலங்கை உள்கட்டமைப்புத்துறையில் முதலீடு செய்ய இந்திய முதலீட்டாளர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். ரணிலுடன் நடத்திய பேச்சு நல்லவகையில் அமைந்தது. இருதரப்பு வர்த்தக ஒத்துழைப்பு வளர இந்தியா விரும்புகிறது என்றார் மோடி.

தமிழர்களுக்கு அதிகாரம்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரணில், இலங்கை அரசியல்சாசன சட்டத்துக்கு உட்பட்டு தமிழர்களுடன் அரசியல் அதிகாரப் பகிர்வு செய்து கொள்வது குறித்து எங்கள் அரசு பரிசீலித்து வருகிறது. இலங்கையின் போரின்போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் பேசினேன்.

இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளுமே இந்தியாவுடன் நல்லுறவை பேண வேண்டும் என்றே விரும்புகின்றன. இலங்கையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்தியாவுடன் வலுவாகி வரும் வர்த்தக உறவால் இந்த இலக்கு சாத்தியமாகும் என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x