Published : 13 Oct 2020 07:37 AM
Last Updated : 13 Oct 2020 07:37 AM

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி ஒரு நாள் மாவட்ட ஆட்சியரான 17 வயது மாணவி: 63 மண்டலங்களில் தாசில்தார் பணியிலும் அசத்திய மாணவிகள்

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் வித்தியாசமான முறையில் கொண்டாடினார். அரசு பள்ளிகளில் படித்துவந்த மாணவி ஒருவர் ஒரு நாள்மாவட்ட ஆட்சியராகவும், 63 மாணவிகள் அங்குள்ள 63 மண்டலங்களில் ஒரு நாள் தாசில்தாரர்களாகவும் பணியாற்றினர்.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அனந்தபூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு உரிய கவுரவம் வழங்க மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் தீர்மானித்தார். அதன்படி அவர் செயல்படுத்திய நூதன திட்டம் மாணவிகளுக்கு புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளிகளில் படித்து வரும்மாணவிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஒரு நாள்அரசு அதிகாரிகளாக வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பேரில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், கார்லடின் மண்டலம் கஸ்தூரிபாய் அரசு பள்ளியில் இன்டர்மீடியட் (பிளஸ் 2)படிக்கும் மாணவி ஷ்ராவணி, ஒரு நாள் அனந்தபூர் மாவட்ட ஆட்சியராக பதவியேற்றார். இதற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர், இணை ஆட்சியர் நிஷாந்த் குமார் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள் மாணவி ஷ்ராவணியை அழைத்து சென்று மாவட்ட ஆட்சியர் நாற்காலியில் அமர வைத்தனர். திஷா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்கும் கோப்பில் ஒரு நாள் மாவட்ட ஆட்சியரான ஷ்ராவணி கையெழுத்திட்டார். ஒரு நாள் இணை மாவட்ட ஆட்சியராக மற்றொரு மாணவி மது பொறுப்பேற்றார்.

மேலும், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள 63 மண்டலங்களில் தாசில்தாரர்களாக பள்ளி மாணவிகள் பணியாற்றினர். இதில்மாணவிகள் மாவட்ட ஆட்சியர்,இணை ஆட்சியர், கோட்டாச்சியர், தாசில்தார் மற்றும் தகவல்துறை மற்றும் பிற துறைஅலுவலர்களின் உயர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். அனந்தபூர் மாவட்டம் முழுவதும் அரசு பள்ளி மாணவிகள் மட்டுமே அன்றைய தினம் அதிகாரிகளாக பணியாற்றினர்.

இதுகுறித்து கலெக்டர் சந்திரசேகர் பேசுகையில், ‘‘பெரும்பாலான பொறுப்புகளை பெண்கள்ஏற்றால், மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்கும். எனவேதான் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் பெண்கள்உயர் பதவி வகிக்க குறிக்கோளோடு போராடி முன்னுக்கு வர வேண்டும்’’ என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x