Last Updated : 12 Oct, 2020 05:23 PM

 

Published : 12 Oct 2020 05:23 PM
Last Updated : 12 Oct 2020 05:23 PM

கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்தியாவில் கரோனா மூலம் 18 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள் உருவாக்கம்: தமிழகத்துக்கு 2-வது இடம்

கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டபின் கடந்த ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் வரையிலான 4 மாதத்தில் 18 ஆயிரம் டன் (1.80 கோடி கிலோ) மருத்துவக் கழிவுகள் நாட்டில் உருவாகியுள்ளன என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலம் 3,587 டன் கழிவுகளை உருவாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகம் 1,737 டன் கழிவுகளை உருவாக்கியுள்ளது. இதில் அதிகபட்சமாக கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் நாடு முழுவதும் 5,500 டன் மருத்துவக் கழிவுகள் உருவாகியுள்ளன.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரங்களில் கூறப்பட்டுள்ளதாவது:

''கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையில் நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொடர்பாக 18,006 டன் மருத்துவக் கழிவுகள் உருவாகியுள்ளன. இந்தக் கழிவுகள் அனைத்தும் 198 பொது மருத்துவக் கழிவுகள் சுத்திகரிக்கும் மையம் மூலம் சேகரிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, அழிக்கப்பட்டன.

கரோனாவில் உருவான மருத்துவக் கழிவுகள் என்பது பிபிஇ ஆடை, முகக்கவசம், ஷூ கவர், கையுறை, டிஷ்யு, ரத்தம் தோய்ந்த பொருட்கள், ரத்தம் தோய்ந்த மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டர், பஞ்சு, ரத்தக்கறையுடன் கூடிய படுக்கை விரிப்பு, நீடில், சிரிஞ்ச் உள்ளிட்டவை அடங்கும்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலம் 3,587 டன் மருத்துவக் கழிவுகளைக் கடந்த 4 மாதத்தில் உருவாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகம் (1,737 டன்), குஜராத்(1,638 டன்), கேரளா (1,516 டன்), உத்தரப் பிரதேசம் (1,432 டன்), டெல்லி (1,400 டன்), கர்நாடகா (1,380 டன்), மேற்கு வங்கம் (1000 டன்) மாநிலங்களில் மருத்துவக் கழிவுகள் உருவாகியுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக நாட்டில் 5,490 டன் மருத்துவக் கழிவுகள் உருவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக குஜராத்தில் 622 டன் கழிவுகள் உருவாகியுள்ளன.

அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 543 டன் மருத்துவக் கழிவுகள், மகாராஷ்டிராவில் 534 டன், உ.பி.யில் 507 டன், கேரளா 494 டன் கழிவுகள் உருவாகியுள்ளன. டெல்லியில் 382 டன் கழிவுகள் செப்டம்பரில் உருவாகியுள்ளன.

ஆகஸ்ட் மாதத்தில் 5,420 டன் மருத்துவக் கழிவுகள் உருவாகின. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,359 டன், கேரளா, கர்நாடகாவில் தலா 588 டன் கழிவுகள் உருவாகின.

ஜூலை மாதத்தில் 4,253 டன் மருத்துவக் கழிவுகள் உருவானதில் மகாராஷ்டிரவில் அதிகபட்சமாக 1,180 டன், கர்நாடகாவில் 540 டன், தமிழகத்தில் 401 டன் மருத்துவக் கழிவுகள் உருவாகின.

ஜூன் மாதத்தில் 3,025 டன் கழிவுகள் உருவாகின. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 524 டன் மருத்துவக் கழிவுகளும், அதைத் தொடர்ந்து குஜராத்தில் 350 டன் கழிவுகளும் உருவாகின. டெல்லியில் 333 டன், தமிழகத்தில் 312 டன் மருத்துவக் கழிவுகளும் உருவாகின''.

இவ்வாறு புள்ளிவிவரத்தில் தரப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x