Last Updated : 03 Sep, 2015 08:37 AM

 

Published : 03 Sep 2015 08:37 AM
Last Updated : 03 Sep 2015 08:37 AM

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி: பெங்களூரு மாநகராட்சியை காங். கைப்பற்றுகிறது? - நீதிமன்றத்தில் பாஜக வழக்கு

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் பெங்களூர் மாநகராட்சியை கைப்பற்ற போவதாக தகவல் வெளியாகிள்ளது. இந்த கூட்டணியை வீழ்த்த பாஜக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 22-ம் தேதி நடைபெற்ற பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பாஜக 100, காங்கிரஸ் 76, மஜத 14, மற்றவை 8 வார்டுகளில் வெற்றிப் பெற்றன. இதில் எந்த கட்சிக்கும் மேயர், துணை மேயர் பதவியை கைப்பற்ற தேவையான 131 வாக்குகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் சுயேட்சையாக வென்ற ஒருவர் பாஜகவின் இணைவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் பாஜக வாக்குகளின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் 101 வாக்குகளை கொண்டுள்ள காங்கிரஸ் மஜத, சுயேட்சைகள் உதவியுடன் மேயர், துணை மேயர், நிலைக்குழு உறுப்பினர் உள்ளிட்ட‌ பதவிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. எனவே கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் மஜத தலைவர்கள் தேவகவுடா,குமாரசாமியிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி மேயர் தேர்தலில் மஜதவினர் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களித்தால் மஜத-வை சேர்ந்தவர்களுக்கு துணை மேயர், நிலைக்குழு தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளை வழங்குவதாக காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. இதே போல 7 சுயேட்சை கவுன்சிலர்களின் வாக்குகளையும் காங்கிரஸ் திரட்டி யுள்ளது. சுயேட்சைகள் பாஜகவுக்கு தாவாமல் இருப்பதற்காக‌, அவர்களை கேரளா மாநிலம் கொச்சியில் தங்க வைத்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் சித்தரா மையா, பரமேஷ்வர் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் நேற்று தேவகவுடாவை ரகசியமாக சந்தித்து இறுதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரஸூக்கு ஆதரவு அளிப்பதாக தேவகவுடா உறுதி அளித்துள்ளார். இதனை வருகிற சனிக்கிழமை நடைபெறும் மஜத நிர்வாகிகள் கூட்டத்தில் தேவகவுடா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே காங்கிரஸ், மஜத கூட்டணியை கலைக்க பாஜக தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் ஆகியோர் தேவகவுடாவை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பாஜக கூட்டணிக்கு குமாரசாமியும், மஜத-வின் முக்கிய‌ நிர்வாகிகளும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிப்பதால் காங்கிரஸுடன் கூட்டணி உறுதியாகிவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் பாஜக சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்ய‌ப்பட்டுள்ளது. அதில், ‘‘பெங்களூரு மாநகராட்சி மேயரை தேர்தலில் எம்.எல்.ஏ., எம்.எல்.சி., எம்.பி.க்கள் வாக்களிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மட்டுமே வாக்களிக்க உத்தரவிட வேண்டும். இத்தகைய புதிய நடைமுறை பின்பற்றப்பட்டால் தேவையற்ற குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்'' என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளதால் காங்கிரஸ், மஜத கூட்டணிக்கு சிக்கல் உருவாகியுள்ளது. முன்னதாக முதல்வர் சித்தராமையா, டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி மற்றும் உயர் நிலை தலைவர்களை சந்தித்து பேசி இந்த கூட்டணிக்கு ஆதரவு திரட்ட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x