Last Updated : 11 Oct, 2020 04:24 PM

 

Published : 11 Oct 2020 04:24 PM
Last Updated : 11 Oct 2020 04:24 PM

பாஜகவின் முற்போக்கான கொள்கைகள் என்னை ஈர்த்தன: கட்சியில் இணைந்தபின் முத்தலாக் மனுதாரர் ஷயரா பானு பேட்டி 

ஷயரா பானு.

முத்தலாக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முதன்முதலில் மனுத்தாக்கல் செய்த ஷயரா பானு, முஸ்லிம் பெண்கள் மீதான பாஜகவின் முற்போக்கான அணுகுமுறையே தான் கட்சியில் சேரத் தூண்டியது என்று தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷயரா பானு முத்தலாக் நடைமுறையை எதிர்த்துப் போராடிய சமூக ஆர்வலர் ஆவார்.

ஷயரா பானு 2015-ல் தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவரது கணவர் விரைவுத் தபால் ஒன்றின் மூலம் மூன்று முறை "தலாக்" எனக் குறிப்பிட்டு அவரை விவாகரத்து செய்தார். 15 ஆண்டுகள் மணவாழ்க்கை ஒரே வார்த்தையில் முறிக்கப்பட்டதைக் கண்டு ஷயரா பானு மனமுடைந்தார்.

முஸ்லிம் ஆண்கள் உடனுக்குடன் 3 முறை தலாக் (முத்தலாக்) கூறி மனைவியை விவாகரத்து செய்வது வழக்கமாக இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஷயரா பானு உள்ளிட்ட 7 பேர், முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 2016-ல் மனுத் தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த நடைமுறை சட்ட விரோதம் என 2017-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதைத் தடை செய்ய சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.

இந்நிலையில் ஷயரா பானு தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில் காஷிப்பூரில் வசிக்கும் ஷயரா பானுவை பாஜக மாநிலத் தலைவர் பன்சிதர் பகத் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று வரவேற்றார். அதைத் தொடர்ந்து மாநில பாஜக மூத்த நிர்வாகிகள் அனைவரது முன்னிலையிலும் ஷயரா பானு கட்சியில் இணைந்தார்.

பாஜகவில் சேர்ந்தது குறித்து பிடிஐக்கு அளித்த நேர்காணலில் ஷயரா பானு கூறியதாவது:

"முஸ்லிம் பெண்களுக்கான பாஜகவின் முற்போக்கான அணுகுமுறை, பிரதமர் நரேந்திர மோடியின் உள்ளடக்கிய வளர்ச்சி பற்றிய பார்வை ஆகியவை என்னைக் கட்சிக்குக் கொண்டு வந்தன.

முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கும், உயர்கல்விக்கு அனுமதி மறுப்பது போன்ற அநீதிகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கும் நான் பாஜகவில் இணைந்துள்ளேன். பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற தவறான எண்ணங்களைச் சிதைக்க முயல்வேன். சிறுபான்மையினருக்கான பாஜகவின் நியாயமான நோக்கங்களை நான் நம்புகிறேன். கட்சி சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற தவறான எண்ணம் சிதைக்கப்பட வேண்டும்''.

இவ்வாறு ஷயரா பானு தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, "நான் அதைத் தேடி பாஜகவுக்கு வரவில்லை. ஆனால், எனக்கு ஒதுக்கப்பட்ட எந்தவொரு பணியையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன். எனது ஒரே குறிக்கோள், உயர்கல்வி கற்க மறுப்பு போன்ற அநீதிகளுக்கு இன்னும் ஆளாகி வரும் முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்திற்கும், அவர்கள் அதிகாரம் பெறுவதற்கும் போராடுவதே" என்று ஷயரா பானு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x