Last Updated : 10 Oct, 2020 03:08 PM

 

Published : 10 Oct 2020 03:08 PM
Last Updated : 10 Oct 2020 03:08 PM

இந்தியாவில் 1.72 கோடிக்கும் அதிகமாக 10 வயது முதல் 19 வயதுள்ள திருமணமான குழந்தைகள், பதின்வயதினர் உள்ளனர்: ஆய்வில் தகவல்

இந்தியாவில் 1.72 கோடிக்கும் அதிகமான அளவில் 10 வயது முதல் 19 வயது வரையிலான திருமணமான குழந்தைகள், பதின்வயதினர் இருப்பதாக குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்பான சிஆர்ஒய் (CRY) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் அரசு நிர்ணயம் செய்துள்ள வயதுக்கும் கீழ் திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 11-ம் தேதி (நாளை) சர்வதேச பெண் குழந்தை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து, சிஆர்ஒய் அமைப்பு, இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் குறித்த கடந்த 10 ஆண்டுகளின் நிலை எனும் தலைப்பில் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் 1991, 2001, 2011 ஆகிய புள்ளிவிவரங்கள், தேசிய குடும்ப நல சர்வே 2015-16 ஆகியவற்றில் இந்தியாவில் குழந்தைத் திருமணங்களின் நிலை குறித்த தகவல்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வு அறிக்கை கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''இந்தியாவில் அரசு நிர்ணயித்துள்ள வயதுக்கும் கீழாக குழந்தைத் திருமணம் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இந்திய மக்கள்தொகையில் 10 வயது முதல் 19 வயது வரையிலான 1.72 கோடி குழந்தைகள், பதின்வயதினர் திருமணம் முடித்துள்ளனர்.

இது ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 7 சதவீதமாகும். இந்தியாவில் திருமணமான அனைத்துக் குழந்தைகளிலும் 75 சதவீதம் பேர் 10 வயது முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது

கடந்த 2001 முதல் 2011 வரையிலான ஆண்டுகளில் கிராமங்களில் திருமணமான குழந்தைகளில் 57 சதவீதம் பேர் 15 வயது முதல் 19 வயது வரையில் இருப்பவர்கள். அதேசமயம் நகர்ப்புறங்களிலும் குழந்தைத் திருமணம் அதிகரித்துள்ளது. அங்கு 41 சதவீதம் குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன.

10 வயதிலிருந்து 14 வயதுள்ள பதின்வயதில் உள்ளவர்களுக்குத் திருமணம் நடப்பது கடந்த 2001 முதல் 2011 வரை எச்சரிக்கை விடுக்கும் வகையில் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், 15 முதல் 19 வயதுள்ளவர்களுக்கு நடந்த திருமணம் என்பது 0.22 சதவீதம் குறைந்துள்ளது.

10 முதல் 19 வயதுள்ள திருமணமான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2001-2011 ஆம் ஆண்டுகளில் 0.23 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஆண் குழந்தைகளுக்கான திருமணம் என்பது 19 சதவீதம் அதிகரித்துள்ளது''.

இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஆர்ஒய் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பூஜா மார்வாஹா கூறுகையில் “, குழந்தைத் திருமணம் என்பது மனித உரிமை மீறல். பெண் குழந்தைகள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குழந்தைத் திருமணம் என்பது ஆண், பெண் இருதரப்பு குழந்தைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக விளிம்பு நிலையில் இருக்கும் சமூகத்தில் தாக்கத்தை அதிகமாக ஏற்படுத்தும். ஆதலால், உடனடியாக 2006, குழந்தை திருமணத் தடைச் சட்டத்தை வலிமைப்படுத்த வேண்டும்.

குழந்தைத் திருமணத்தால் குழந்தைகளின் கல்வி, உடல்நிலை, சரிவிகித உணவு, சமூகத்தின் வறுமை, தேசம் ஆகியவற்றில் நேரடியான தாக்கத்தையும், பல தலைமுறையில் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும், சத்துள்ள உணவையும் உறுதி செய்தல், 12 வயதுவரை பள்ளிப் படிப்பை உறுதி செய்தல், வாழ்க்கைக்குத் தேவையான தொழிற்கல்வி அளித்தல், உயர்கல்விக்கான வாய்ப்பளித்தல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தலைமுறைகள் பாதிக்கப்படுவதை தடுக்கலாம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x