Published : 02 Oct 2020 08:00 AM
Last Updated : 02 Oct 2020 08:00 AM

குடியரசுத் தலைவர், பிரதமரின் பயணத்துக்காக ‘ஏர் இந்தியா ஒன்' அதிநவீன விமானம்: ‘பறக்கும் கோட்டை' டெல்லி வந்தது

குடியரசுத் தலைவர், பிரதமரின் பயணத்துக்காக அதிநவீன விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'ஏர் இந்தியா ஒன்' என்றழைக்கப்படும் இந்த ‘பறக்கும் கோட்டை' அமெரிக்காவில் இருந்து நேற்று டெல்லி வந்தடைந்தது.

குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு,பிரதமர் நரேந்திர மோடி ஆகி
யோர் தற்போது ஏர் இந்தியாவின் பி747 விமானங்களில் பயணம் செய்கின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், 'ஏர்போர்ஸ் ஒன்' என்ற அதிநவீன விமானத்தை பயன்படுத்துகிறார். இதே அளவுக்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் கொண்ட 2 விமானங்
களை வடிவமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து பி 777 ரகத்தை சேர்ந்த 2 விமானங்கள் வாங்கப்பட்டன. இந்த விமானங்களில், 'ஏர்போர்ஸ் ஒன்' விமானத்தின் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
குடியரசுத் தலைவர், பிரதமருக்காக வடிவமைக்கப்பட் டுள்ள இந்த அதிநவீன விமானங்களுக்கு 'ஏர் இந்தியா ஒன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இவை 'பறக்கும் கோட்டை' என்று வர்ணிக்கப்படுகின்றன.

ஏவுகணை தடுப்பு அமைப்பு

சுமார் 143 டன் எடை கொண்ட 'ஏர் இந்தியா ஒன்' விமானம் 43,100 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. விமானத்துக்குள் அலுவலகம், கூட்ட அரங்கு, படுக்கை அறை, சமையல் அறை, 2,000 பேர் சாப்பிடுவதற்கு தேவையான உணவு பொருட்களை வைக்கும் கிடங்கு,செயற்கைக்கோள் தொலைபேசி, இணைய வசதி, மருத்துவ அறுவை சிகிச்சை அறை, மருத்துவக் குழுவினர் தங்கும் அறை, பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை, விஐபிக்கள் தங்கும் அறை என அனைத்து வசதிகளும் உள்ளன. 'ஏர் இந்தியா ஒன்' அணியை சேர்ந்த இரு விமானங்களிலும் ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர், பிரதமர் பயணம் செய்யும் விமானத்தை இதுவரை 'ஏர் இந்தியா' விமானிகளே இயக்கி வந்தனர். இனிமேல் 'ஏர் இந்தியா ஒன்' விமானங்களை விமானப் படையின் சிறப்பு பயிற்சி பெற்ற விமானிகள் இயக்குவார்கள். மொத்தம் 8 விமானிகள், விமானத்தில் இருப்பார்கள். இவர்கள் இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு விமானத்தை இயக்குவார்கள்.

அமெரிக்காவின் டெக்சாஸ் விமான நிலையத்தில் இருந்து 'ஏர் இந்தியா ஒன்' அணியை சேர்ந்த முதல் விமானம் நேற்று பிற்பகல் டெல்லி வந்தடைந்தது. மற்றொரு விமானம் விரைவில் டெல்லி வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x