Published : 02 Sep 2015 09:08 AM
Last Updated : 02 Sep 2015 09:08 AM

சிறப்பு அந்தஸ்தால் மட்டும் பிரச்சினை தீராது: பேரவையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைப்பதால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடாது என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவை யில் நேற்று கொண்டு வரப்பட்டது. அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

மாநில பிரிவினை மசோதாவில் குறிப் பிட்டுள்ள அனைத்தும் அமல்படுத்த வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதுடன், இங்கு தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு வரி விலக்கும் அளிக்க வேண்டும். அனந்தபூர் மாவட்டத்தில் மத்திய பல்கலைக்கழகம், விஜயநகரத்தில் பழங்குடியினருக்கான பல்கலைக் கழகம் போன்றவை ஏற்படுத்தப்பட வேண்டும்.

விசாகப்பட்டினம்-சென்னை இடையே 6 வழிச்சாலை அமைக்க ரூ. 5 ஆயிரம் கோடி நிதி உதவி கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த தடத்தில் பல தொழிற்சாலை கள் அமையும். விசாகப்பட்டினம், சென்னைக்கு இரு துறைமுகங்கள் இருப்பதால் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் சுலபம் ஆகும். இதுதொடர்பாக பிரதமர் மோடி யிடம் நேரில் அறிக்கை அளிக்கப்பட் டுள்ளது. தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங் களுக்கு சமமாக ஆந்திராவும் வளர்ச்சி அடையும்வரை மத்திய அரசு ஆதரவையும், நிதி உதவி யையும் அளிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அந்தஸ்து வந்து விட்டால் மட்டுமே பிரச்சினைகள் அனைத்தும் தீராது. வரும் 5 ஆண்டுகள் வரை நிதி பற்றாக்குறை பட்ஜெட் இருப்பதால், வளர்ச்சி பணிகள் தடைபடும் வாய்ப்பு உள்ளது. புதிய தலைநகருக்கு நிலம் சேகரித்து, போதிய நிதியையும் மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும். சிறப்பு அந்தஸ்துடன், சிறப்பு நிதி உதவியும் வழங்கும்படி கேட்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்துக்காக சிலர் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.

இத்தீர்மானத்தின் மீது பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ” சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு ஒரு மாதம் கெடு விதிக்க வேண்டும். அதற்குள் வழங்காவிட்டால் பாஜகவுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் முறித்து கொள்ள வேண்டும்” என கூறினார். இதனால், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x