Last Updated : 08 Sep, 2015 08:14 AM

 

Published : 08 Sep 2015 08:14 AM
Last Updated : 08 Sep 2015 08:14 AM

விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்த பொறியாளர் கைது: நண்பரின் மனைவியை வசப்படுத்த போலி சிம் கார்டு, ஃபேஸ்புக்- மனைவியையும் கொன்றதாக பெங்களூரு போலீஸார் தகவல்

பெங்களூருவில் நண்பரின் மனைவியை வசப்படுத்துவதற்காக அவரது பெயரில் சிம் கார்டு, ஃபேஸ்புக் பக்கம் தொடங்கி டெல்லி, பெங்களூரு விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸாரின் தீவிர விசாரணையில் அவர் தனது மனைவியை கொன்றதாகவும் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் டெல்லி மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலையங்களுக்கு வாட்ஸ் ஆப் மற்றும் செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதேபோல 6 சர்வதேச விமான நிலையங்களிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பெங்களூரு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்ணை கண்காணித்தனர். அப்போது மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண் பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர். பகுதியைச் சேர்ந்த சிஜு ஜோசப் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் இருந்தே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து போலீஸார் ஜோசப்பை கடந்த சனிக்கிழமை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மிரட்டல் விடுக்க பயன்படுத்தப்பட்ட செல்போன் மற்றும் சிம் கார்டு தன்னுடையது அல்ல என உறுதிபட தெரிவித்தார். மேலும் மிரட்டல் விடுக்கப்பட்டபோது பதிவான குரலும், ஜோசப் குரலும் மாறுபட்டதாக இருந்தது. எனவே அவரது பெயரைப் பயன்படுத்தி வேறு யாரோ இத்தகைய குற்றத்தை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.

இது தொடர்பாக ஜோசப்பின் நண்பர்களிடமும், அண்டை வீடுகளில் வசிப்பவர்களிடமும் விசாரணை ந‌டத்தினர். அப்போது கேரளாவைச் சேர்ந்த கணிப்பொறி பொறியாளரான கோகுல் மீது சந்தேகம் வலுத்தது. ஏனென்றால் நண்பர்களான ஜோசப்பும், கோகுலும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். கோகுல் அடிக்கடி ஜோசப் வீட்டுக்கு சென்று வருவதும் தெரியவந்தது.

எனவே கோகுலிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, “ஜோசப்பின் மனைவி மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. அவரை வசப்படுத்த வேண்டும் என்பதற்காக ஜோசப்பை சிக்க வைக்க திட்டமிட்டேன். எனவே அவரது பாஸ்போர்ட் மற்றும் புகைப்படங்களை திருடி அவரது பெயரில் சிம் கார்டு வாங்கினேன்.

அந்த எண்ணில் இருந்து டெல்லி, பெங்களூரு விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன். இந்த வழக்கில் ஜோசப் சிக்கினால், அவரது மனைவியுடன் சேர்ந்து வாழலாம் என திட்டமிட்டே இவ்வாறு செய்தேன். மேலும் அவரது பெயரில் போலி ஃபேஸ்புக் ஆரம்பித்து, ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளராக சித்தரித்தேன். இவ்வாறு செய்தால் சைபர் க்ரைம் போலீஸார் அவரை கைது செய்வார்கள் என நம்பினேன்” என தெரிவித்துள்ளார்.

மனைவியை கொன்றதாக வாக்குமூலம்

இதுதொடர்பாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் என்.எஸ். மேக்ரிக் கூறும்போது, “கோகுல் தனது நண்பரின் மனைவியை வசப்படுத்துவதற்காக ஜோசப் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்த தனது மனைவி அனுராதாவையும் தானே கொன்றதாக கோகுல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

டெல்லி, பெங்களூரு விமான நிலையங்களுக்கும், சர்வதேச விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததன் மூலம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு சுமார் 10 லட்சம் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை நம்முடைய நாடே ஏற்க வேண்டியுள்ளது. இத்தகைய அணுகுமுறை வன்மையாக தண்டிக்க தக்கது” என்றார்.

கைதாகியுள்ள கோகுல் மீது நாட்டின் அமைதி, பொதுமக்களின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தியது உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கில் ஜோசப் சிக்கினால், அவரது மனைவியுடன் சேர்ந்து வாழலாம் என திட்டமிட்டே இவ்வாறு செய்தேன். மேலும் அவரது பெயரில் போலி ஃபேஸ்புக் ஆரம்பித்து, ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளராக சித்தரித்தேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x