Published : 18 Sep 2020 06:54 am

Updated : 18 Sep 2020 06:55 am

 

Published : 18 Sep 2020 06:54 AM
Last Updated : 18 Sep 2020 06:55 AM

குறுகிய காலத்தில் பொது முடக்கத்தை மத்திய அரசு அறிவித்தது தவறு: மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாதம்

rajya-sabha-mp

புதுடெல்லி

குறுகிய காலத்தில் பொது முடக்கத்தை மத்திய அரசு அறிவித்தது தவறு என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் வாதம் செய்தனர்.

மாநிலங்களவையில் நேற்று இதுதொடர்பான விவாதத்தை மாநிலங்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா தொடங்கி வைத்துப் பேசியதாவது:

அவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசும்போது, பொது முடக்கத்தை மோடி தலைமையிலான அரசு அறிவித்ததால் சுமார் 14 லட்சம் முதல் 29 லட்சம் பேர் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டது. மேலும் 37 ஆயிரம் பேர் முதல் 78 ஆயிரம் பேர் வரை இறப்பது தடுக்கப்பட்டது என்று கூறினார்.

இந்த எண்ணிக்கையை எந்த அடிப்படையில் மத்திய அமைச்சர் கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. பொதுமுடக்கம் அறிவிக்கும் போது நமது நாட்டில் 600 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் தொற்று இருந்தது. ஆனால் இன்று 50 லட்சத்தையும் தாண்டிவிட்டது. மேலும் 82 ஆயிரம் பேர் இறந்துவிட்டனர். இதுதான் உண்மையான நிலை.

அவசர அவசரமாக பொது முடக்கத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது தவறு. குறுகிய காலத்தில் பொதுமுடக்கத்தை கொண்டு வந்து அரசு தவறிழைத்துவிட்டது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் உணவுக்காக நடந்தே பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லும் நிலை ஏற்பட்டது. பொதுமுடக்கம் அறிவிக்கும் முன்னர் மாநில அரசுகளை கலந்தோலோசித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

பொது முடக்கத்தால் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்ததுதான் மீதம். இதுதான் நாட்டின் இன்றைய துரதிருஷ்டமான நிலை. யார் யார் இறந்தார்கள் என்று மாநில அரசுகளுக்குத் தெரியும். அவர்களது குடும்பத்தாருக்கு உரிய நிவாரண நிதியை அரசு வழங்க வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்களின் தகவல்களைத் திரட்டி அவர்களின் எதிர்காலத்துக்கு அரசு திட்டமிடவேண்டும். மத்திய - மாநில அரசுகளிடையே கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தவேண்டும். இவ்வாறு ஆனந்த் சர்மா பேசினார்.

அப்போது பாஜக எம்.பி. வினய் சஹஸ்ரபுத்தே கூறும்போது, “பொதுமுடக்கம் அறிவிப்பதற்கு முன்னதாக மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் 15 முறை பேசியுள்ளனர். அப்போது எந்த முதல்வரும் பொது முடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பைப் போலவே அனைத்து முதல்வர்களின் கருத்துகளை கேட்ட பின்னரே பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த விஷயத்தில் பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் அரசியல் செய்கிறார்கள். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் இரட்டை நிலையைக் கடைபிடிக்கக் கூடாது” என்றார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன் பேசும்போது, “பல முறை மாநில முதல்வர்களுடன் காணொலியில் பிரதமர் பேசியதாக கூறுகிறீர்கள். மார்ச் 26-க்கு முன்னதாக பேசிய ஒரு வீடியோவை உங்களால் சமர்ப்பிக்க முடியுமா. எம்.பி.க்களின் தொகுதி வளர்ச்சி நிதி நிறுத்தப்பட்டது ஏன்” என்றார்.

திமுக எம்.பி. திருச்சி சிவா பேசும்போது, “இந்தியாவில் முதல் கரோனா வைரஸ் தொற்று ஜனவரி மாதமே கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியானால் ஜனவரி முதல் மார்ச் 24-ம் தேதி வரை அரசு என்ன செய்து கொண்டிருந்தது? ஏன் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஏனென்றால், அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகைக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து கொண்டிருந்தது.

மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லை. பொதுமுடக்கம் காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. ஆனால் இங்கு தவறான தகவல்களை மத்திய அமைச்சர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்” என்றார். இவ்வாறு மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது.


மத்திய அரசுபொது முடக்கம்முழு ஊரடங்குமாநிலங்களவைஎதிர்க்கட்சி எம்.பி.க்கள்Rajya sabha mp

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author