Published : 15 Sep 2020 06:44 AM
Last Updated : 15 Sep 2020 06:44 AM

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜப்பான், கனடா, இந்தோனேசியா, மலேசிய தலைவர்களுடன் இந்திய குடியரசுத் தலைவர், பிரதமரை உளவு பார்க்கும் சீனா: 5 முன்னாள் பிரதமர்கள், முதல்வர்கள், எம்.பி.க்கள் உட்பட 10,000-க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, 5 முன்னாள் பிரதமர்கள், 40 முன்னாள், இந்நாள் முதல்வர்கள், 350 எம்.பி.க்கள் உட்பட சுமார் 10 ஆயிரம் இந்திய பிரபலங்களை சீன நிறுவனம் உளவு பார்த்திருப்பது அம்பலமாகி உள்ளது.

இந்தியா, இந்தோனேசியா, மலேசியா உட்பட சுமார் 22-க்கும் மேற்பட்ட அண்டை நாடுகளின் நிலம், கடல் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. உலக வல்லரசான அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா தன்னை முன்னிறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 'ஹைபிரிட்' போர் என்ற மறைமுக யுத்தத்தில் சீனா குதித்துள்ளது.

சீனாவை சேர்ந்த 'ஜென்ஹுவா டேட்டா இன்பர்மேஷன் டெக்னாலஜி கோ நிறுவனம்', அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரிட்டன், ஜப்பான், கனடா, இந்தோனேசியா, மலேசியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், அரசு, நீதித் துறை தலைவர்கள், மூத்த அதிகாரிகளை உளவு பார்த்திருப்பது அம்பலமாகி உள்ளது.

சீன அரசு மற்றும் அந்த நாட்டு ராணுவத்துடன் ஜென்ஹுவா நிறுவனம் மிக நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. சீன அரசுக்காக சர்வதேச தலைவர்களை, ஜென்ஹுவா வேவு பார்த்திருக்கிறது. ட்விட்டர், பேஸ்புக், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக உலக தலைவர்களின் தகவல்களை அந்த நிறுவனம் திருடியுள்ளது.

சீனாவின் ஜென்ஹுவா நிறுவனத்தின் உளவு மோசடிகளை, அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டோபர் பால்டிங் வெட்டவெளிச்சமாக்கி உள்ளார். சீனாவின் பெக்கிங் பல்கலைக்கழகத்தில் 9 ஆண்டுகள் வணிகவியல் பேராசிரியராக பணியாற்றிய அவர், தற்போது வியட்நாமின் புல்பிரைட் பல்கலைக்கழக பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்தியாவை சேர்ந்த ' தி இந்தியன் எக்ஸ்பிரஸ்', ஆஸ்திரேலியாவை சேர்ந்த `ஆஸ்திரேலியன் பைனான்ஷியல் ரீவியூ', பிரிட்டனை சேர்ந்த 'டெய்லி டெலிகிராப்' உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக சீன நிறுவனத்தின் திரைமறைவு ரகசியங்களை பேராசிரியர் கிறிஸ்டோபர் பால்டிங் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

2.5 லட்சம் பேர்

ஜென்ஹுவாவுக்கு சுமார் 20 வெளிநாடுகளில் தகவல் திரட்டும் மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலம் நாளொன்றுக்கு 15 கோடி தகவல்களை அந்த நிறுவனம் திரட்டுகிறது. அமெரிக்க பேராசிரியர் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள ஆதாரங்களின்படி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 2.5 லட்சம் பேரை ஜென்ஹுவா உளவு பார்த்துள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 52,000 பேர், ஆஸ்திரேலியாவில் 35,000, இந்தியாவில் 10,000, கனடாவில் 5,000, இந்தோனேசியாவில் 2,100, மலேசியாவில் 1,400 பேர் ஜென்ஹுவாவின் ரகசிய கண்காணிப்பு வளையத்தில் இருந்துள்ளனர்.

இந்தியாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடியை ஜென்ஹுவா நிறுவனம் உளவு பார்த்துள்ளது. மேலும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, அப்துல் கலாம் மற்றும் அவர்களது உறவினர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், வாஜ்பாய், தேவ கவுடா, மன்மோகன் சிங் ஆகிய 5 முன்னாள் பிரதமர்கள், அவர்களது உறவினர்கள் ரகசியமாக வேவு பார்க்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் சீன நிறுவன கண்காணிப்பு வளையத்தில் இருந்துள்ளனர்.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 350 எம்.பி.க்கள் குறித்த தகவல்களை ஜென்ஹுவா திரட்டியுள்ளது.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உட்பட 40 முன்னாள், இந்நாள் முதல்வர்களையும் சீன நிறுவனம் கண்காணித்துள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் பிஹார் முதல்வர் லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே உட்பட மூத்த நீதிபதிகள் பலரையும் சீன நிறுவனம் வேவு பார்த்துள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அன்றைய, இன்றைய ராணுவ தளபதிகள் என 60 பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டுள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இந்திய அணுசக்தி கழகத்தின் மூத்த அதிகாரிகளின் சமூக வலைதள நடவடிக்கைகளும் உளவு பார்க்கப்பட்டுள்ளன. அவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

இந்தியாவின் முன்னணி செய்தியாளர்களையும் ஜென்ஹுவா உன்னிப்பாகக் கண்காணித்துள்ளது. அந்த பட்டியலில் இந்து குழும நிறுவனங்களை உள்ளடக்கிய கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவன தலைவர் என்.ரவி, இண்டியா டுடே மூத்த செய்தியாளர் ராஜ்தீப் சர்தேசாய், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைமை ஆசிரியர் ராஜ் கமல் ஜா, ஜி நியூஸ் ஆசிரியர் சுதிர் சுவுத்ரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, கவுதம் அதானி, நடிகை மூன் மூன் சென், நடிகர் வினோத் கன்னா, இயக்குநர் ஷியாம் பெனகல் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களையும் ஜென்ஹுவா கண்காணித்துள்ளது.

சீனாவின் உளவு மோசடி குறித்து சிறப்பு செய்தி வெளியிட்டுள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ், ஜென்ஹுவா நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக விளக்கம் கோரியது. கடந்த 1-ம் தேதி விளக்கம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. கடந்த 9-ம் தேதி சம்பந்தப்பட்ட இணையதளம் முடக்கப்பட்டுவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள சீன தூதரகத்திடம் `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' சார்பில் விளக்கம் கோரப்பட்டது. “தகவல்களை திரட்டி தருமாறு எந்தவொரு நிறுவனத்தையோ, தனி நபரையோ சீன அரசு கேட்டுக் கொள்ளவில்லை. எந்தவொரு நாட்டின் சட்ட விதிகளையும் மீறவில்லை” என்று சீன தூதரக வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.

சீன கம்யூனிஸ்ட் அரசால் பேராபத்து

சீனாவின் உளவு மோசடிகளை சர்வதேச ஊடகங்கள் வாயிலாக வெட்டவெளிச்சமாக்கிய அமெரிக்க பேராசிரியர் கிறிஸ்டோபர் பால்டிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகம் முழுவதையும் சீனா உளவு பார்த்து வருகிறது. இதற்காக அந்த நாடு பெரும் தொகையை செலவிட்டு வருகிறது. இதை உறுதி செய்ய ஆதாரங்கள் இல்லாமல் இருந்தது.

முதல் முறையாக சீனாவின் மோசடியை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளோம். நாங்கள் இப்போது வெளியிட்டிருப்பது சீனாவின் மோசடிகளில் மிகச் சிறிய பகுதி ஆகும். சீனாவை ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் கட்சியால் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதை உலக நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் உளவு வேலை சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவுக்கு எதிராக `ஹைபிரிட்' போர்

லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபடுகிறது. ஹிஸ்புல்லாவுக்கு ஈரான் அரசு தாராளமாக நிதியுதவி வழங்கி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக மோதாமல் ஹிஸ்புல்லா மூலம் ஈரான் மறைமுக போரை நடத்துகிறது. இதேபோல உக்ரைன் மீது ரஷ்யா மறைமுக போரை நடத்தி வருகிறது. உக்ரைனின் கிரிமியா பகுதியை தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஷ்யா, அந்த நாட்டுக்கு எதிராக தீவிரவாத அமைப்புகளை தூண்டிவிட்டு வருகிறது. இதையே `ஹைபிரிட் போர்' என்றழைக்கின்றனர்.

தற்போது லடாக் எல்லையில் இந்திய ராணுவத்துடன் சீன ராணுவம் நேருக்கு நேராக மோதி வருகிறது. அதே நேரம் இந்தியாவுக்கு எதிராக `ஹைபிரிட் போர்2' என்ற மறைமுக போரை நடத்த சீனா திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே 10,000-க்கும் மேற்பட்டோரை சீனா உளவு பார்த்திருக்கிறது.

சமூக வலைதளங்கள், ஊடகங்களில் வெளியான தகவல்களை ஜென்ஹுவா திரட்டி தொகுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலமாகவும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய தலைவர்கள், மக்களின் உணர்வுகளை சீனாவால் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் எங்கெங்கு போராட்டங்கள் நடைபெறுகின்றன? என்ன காரணத்துக்காக போராட்டம் நடைபெறுகிறது? சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை சீனா அலசி ஆராய முடியும். வடகிழக்கு மாநிலங்களில் சீன ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்கள் செயல்படுவதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. தற்போது அம்பலமாகியுள்ள சீனாவின் உளவு மோசடிக்கு பின்னால் மிகப்பெரிய சதித் திட்டங்கள் ஒளிந்திருக்கக் கூடும் என்று சர்வதேச பாதுகாப்புத் துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x