Published : 13 Sep 2020 08:05 PM
Last Updated : 13 Sep 2020 08:05 PM

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: கரோனா சூழலில் முன்னெச்சரிக்கை; முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்

நாடாளுமன்றத்தின் 2020-ஆம் ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி வார விடுமுறையின்றி, அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரு அவைகளும் இயங்கும்.

கரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடக்கும். கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இல்லை. தனிநபர் மசோதாவும் இல்லை.

கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்று மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேள்வி நேரத்தை ரத்து செய்வது ஜனநாயகத்திற்கும் அரசியல் சட்டத்திற்கும் எதிரானது என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. எனினும் நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம் பெறாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடருக்கு முன்பாக வழக்கமாக நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் இந்தமுறை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கிறது.

நாளை (2020 செப்டம்பர் 14 திங்கட்கிழமை) தொடங்கவிருக்கும், 17-வது மக்களவையின் நான்காவது கூட்டத்தொடர் மற்றும் மாநிலங்களவையின் 252-வது கூட்டத்தொடர், 2020 அக்டோபர் 1 அன்று நிறைவடையும்.

18 நாட்களில் 18 அமர்வுகளை இந்தக் கூட்டத்தொடர் காணும். (சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும் வேலை நாட்களாக இருக்கும்). மழைக்கால கூட்டத் தொடரின்போது 47 பொருட்கள் எடுத்துக் கொள்ளப்படும் (45 மசோதாக்கள் மற்றும் 2 நிதி சார்ந்த விஷயங்கள்).

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு இடையே நடைபெறும் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பதால் கோவிட்-19 வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்றிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 11 மசோதாக்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்படுகின்றன.

இதில் வேளாண் தொடர்பான 3 மசோாதாக்களையும், வங்கிச் சீர்திருத்த திருத்தச் சட்டத்துக்கான மசோதாக்களையும் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

கரோனா விவகாரம், கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்துடன் மோதல், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, நடுத்தர சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டது, விமானநிலையங்கள் தனியார் மயம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை ஆகியவை குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x