Last Updated : 29 Sep, 2015 08:16 PM

 

Published : 29 Sep 2015 08:16 PM
Last Updated : 29 Sep 2015 08:16 PM

சட்டப்பேரவை தேர்தலில் வெல்ல பாஜக தீவிரம் மத்திய அமைச்சர்களுடன் அமித்ஷா பிஹாரில் முகாம்

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் வெல்லத் தயாராகிறது பாரதிய ஜனதா கட்சி. இங்கு இன்று முதல் மத்திய அமைச்சர்களுடன் முகாம் இட்டிருக்கிறார் அதன் தேசியத் தலைவர் அமித்ஷா.

பிஹார் மாநில சட்டப்பேரவைக்கு நடைபெறும் ஐந்து கட்ட தேர்தல் முடியும் வரை அமித்ஷா அங்கு இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் மத்திய எரிசக்தித்துறை அமைச்சரும் தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவருமான தர்மேந்தர பிரதானுன் உடன் இருப்பார். இவர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான ஜே.பி.நட்டா, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் மற்றும் மத்திய ஜவுளி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சரான சந்தோஷ் கங்வார் ஆகியோரும் பிஹார் வந்தடைந்துள்ளனர். பிஹாரில் இருந்து பிரிந்த மாநிலமான ஜார்கண்டின் முன்னாள் முதல் அமைச்சரான அர்ஜுன் முண்டாவும் இன்று முதல் பிரச்சாரக் களம் இறங்கி இருகிறார்.

இங்கு சூடு பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்பாராத வரவாக உபியின் பதேபூர் தொகுதி பாஜக எம்பியான சாத்வீ நிரஞ்சன் ஜோதி சேர்க்கப்பட்டுள்ளார். இவர் முஸ்லீம்கள் மீது மதசார்பான கருத்துக்கள் கூறி சர்ச்சைகளில் சிக்கியவர். இதனால், கடந்த ஜனவரியில் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்.

ஆனால், பாஜக தலைமை பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறக்க உள்ளது. இவர், பிஹாரின் பல தொகுதிகளில் நிறைந்திருக்கும் மீனவர் சமுதாயத்தினர் இடையே பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்கு, சாத்வீயும் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது முக்கியக் காரணம்.

இந்தமுறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களால் கட்சிக்கு பெரும் இழப்பு ஏற்படும் எனக் கருதப்படுகிறது. இவர்களை அழைத்து பேசி சமாதானப்படுத்தும் முயற்சியிலும் அமித்ஷா இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x