Published : 08 Sep 2020 09:09 AM
Last Updated : 08 Sep 2020 09:09 AM

லடாக் எல்லையில் உயிரிழந்த இந்தோ-திபெத் வீரரின் இறுதிச் சடங்கில் ராம் மாதவ்

இந்தோ-திபெத் வீரரின் இறுதிச் சடங்கில் பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் பங்கேற்றார்.

துணை ராணுவ அமைப்பான எல்லைப்புற சிறப்புப் படையின் (எஸ்எப்எப்) 7 விகாஸ் பிரிவில் பணியாற்றியவர் நயிமா டென்சின் (51). லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியில் பணியாற்றி வந்த இவர், கடந்த மாதம் 29-ம் தேதி இரவு கண்ணி வெடியை மிதித்ததால் உயிரிழந்தார். பாங்காங் ஏரியின் தெற்குப் பகுதியில் சீன ராணுவத்தினரின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்த நேரத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது.

இந்நிலையில், இந்தோ-திபெத் வீரரான டென்சினின் உடல் அவரது சொந்த ஊரான லே நகரில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, நடைபெற்ற இறுதிச் சடங்கில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ், டென்சினின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ராம் மாதவ் இந்தத் தகவலை ட்விட்டரில் படத்துடன் வெளியிட்ட போதிலும், சிறிது நேரத்தில் அதை நீக்கிவிட்டார். எனினும் இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், ராம் மாதவ் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் சீனாவுக்கு வலிமையான ஒரு தகவலை கூறியிருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x