Last Updated : 11 Sep, 2015 04:23 PM

 

Published : 11 Sep 2015 04:23 PM
Last Updated : 11 Sep 2015 04:23 PM

ஏமனில் சவுதி அரேபிய வான் தாக்குதலில் 6 இந்தியர்கள் பலி: வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி

ஏமனின் ஹோடிடா துறைமுகத்தை குறிவைத்து சவுதி அரேபிய கூட்டுப் படை நடத்திய தாக்குதலில் 6 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவுத் துறை உறுதிபடுத்தியுள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "செப்டம்பர் 10ம் தேதி இரவு காணமல் போனதாக தெரியவந்த 6 பேரின் உடல்கள் 2 படகுகளிலிருந்து மீட்கப்பட்டு, ராணுவ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு உடல்களை அவர்களிடம் ஓப்படைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2 படகுகளில் இருந்த மற்ற 14 பேரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். இதில் 4 பேர் மட்டும் காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவரவர் குடும்பத்தினரிடம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் காணாமல் போனதாக அறிவித்துள்ளோம். அவரை தேடும் முயற்சியை சவுதி அரேபிய அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம்." என்றார்.

ஏமனில் அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப் படைகள் போரில் ஈடுபட்டு வருகின்றன.

போர் உச்சகட்டத்தை எட்டிய சில மாதங்களுக்கு முன்னர் அங்கு பணியாற்றிய இந்தியர்களை மத்திய அரசு கப்பல், விமானம் மூலம் தாய்நாட்டுக்கு அழைத்து வந்தது. எனினும் இன்னமும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே ஹோடிடா துறைமுகப் பகுதியில் இருந்து இரண்டு படகுகளில் கடத்தல்காரர்கள் கச்சா எண்ணெயை கடத்திச் செல்வதாக சவுதி அரேபிய கூட்டுப் படைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த துறைமுகப் பகுதியை குறிவைத்து சவுதி அரேபிய படைகள் செவ்வாய்க்கிழமை இரவு திடீர் தாக்குதல் நடத்தின. இதில் 20 இந்தியர்கள் உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை வெளியுறவுத்துறை உறுதிபடுத்தாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x