Last Updated : 08 Sep, 2015 09:22 AM

 

Published : 08 Sep 2015 09:22 AM
Last Updated : 08 Sep 2015 09:22 AM

பிஹாரில் மும்முனைப் போட்டி: 6 கம்யூனிஸ்ட் கட்சிகள் புதிய கூட்டணி

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 6 கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதனால் அந்த மாநில தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்துள்ளது.

பாஜக அணியில் லோக் ஜனசக்தி, முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பிஹார் தேர்தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சிபிஐ எம்.எல்., சோஷலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா, பார்வர்டு பிளாக், ஆர்.எஸ்.பி. ஆகிய 6 கம்யூனிஸ்ட் கட்சிகள் புதிய கூட்டணி அமைத்துள்ளன.

அந்த கட்சிகளின் தலைவர்கள் பாட்னாவில் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏபி. பரதன், சிபிஐ எம்.எல். பொதுச்செயலாளர் திப்னாகர் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் 6 கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நிருபர்களிடம் பேசியதாவது: இந்தியாவில் 100 கோடீஸ்வரர்களிடம் தலா ரூ.64,000 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்ட சதவீதம் அவர்களிடம் உள்ளது. மறுபுறம் சுமார் 90 சதவீத இந்திய குடும்பங்கள் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் அல்லாடுகின்றன.

கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் பெரும் தொழில்அதிபர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதற்கு நேர்மாறாக ஏழைகளுக்கான மானியத்தை மத்திய அரசு படிப்படியாக ரத்து செய்து வருகிறது. ஏழை, பணக்காரர் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

எங்கள் கூட்டணி தொகுதி உடன்பாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. விரைவில் தொகுதிப்பங்கீடு குறித்து அறிவிப்போம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதேபோல பிஹாரில் ஆட்சி நடத்தும் ஐக்கிய ஜனதா தள அரசும் பல்வேறு துறைகளில் தோல்வியடைந்துள்ளது. எனவே பிஹார் மக்கள் இடதுசாரி கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x