Published : 20 Aug 2020 02:59 PM
Last Updated : 20 Aug 2020 02:59 PM

கரோனாவால் கேரள சுற்றுலாத்துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு: துறைசார் தொழிலாளர்களுக்குக் கடனுதவித் திட்டங்கள் அறிவிப்பு

கேரளத்தைக் கடவுளின் தேசம் என வர்ணிப்பார்கள். அதற்குக் காரணம், அங்கு கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகுதான். திருவனந்தபுரம் மாவட்டத்தில் கோவளம் கடற்கரை தொடங்கி, ஆலப்புழையின் படகு இல்லம் வரை கேரளத்தில் பிரசித்திபெற்ற கண்கவர் பகுதிகளின் பட்டியல் அதிகம். இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு ஆண்டு முழுவதுமே சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பது வழக்கம்.

ஆனால், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவால் கேரளத்தின் சுற்றுலாத்துறை கடும் பின்னடவைச் சந்தித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் கேரள சுற்றுலாத் துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையைச் சார்ந்து இயங்கிவந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்க, அவர்களின் புனர்வாழ்வுக்காக ரூ.455 கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளது கேரள அரசு.

சுற்றுலாத்துறை சார்ந்து வாழ்க்கையை ஓட்டிவந்த ஏழைத் தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் வங்கிகளில் தலா 30 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். கடனை 3 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்தவேண்டும். இந்தக் கடனுக்கான தவணைக் காலம் 6 மாதங்களுக்குப் பின்பே தொடங்குகிறது. இதேபோல் சுற்றுலாத்துறை சார்ந்து இயங்கி வந்த தொழில்முனைவோருக்கு 25 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவீத வட்டி மானியத்தையும் கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரள சுற்றுலாத்துறையின் மிக முக்கிய வருவாய் தரும் இடமாக ஆலப்புழை இருக்கிறது. இங்குள்ள காயலில் மேற்கொள்ளப்படும் படகு சவாரியை விரும்பி தினமும் ஆயிரக்கணக்கானோர் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்றனர். ஆலப்புழை -கோட்டயம் இடையேயான இந்த நீர்வழித் தடத்தில் மட்டும் 2,300 படகு இல்லங்கள் இருக்கின்றன. நீர்ச்சூழலில் வட்டமிடும் இந்த படகு இல்லங்களில் மட்டும் 6,000 பேர் வரை வேலை செய்துவந்தனர். இப்போது இந்தத் தொழிலாளர்கள் முற்றாகத் தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களுக்குக் கேரள சுற்றுலாத்துறை அறிவித்துள்ள 30 ஆயிரம் ரூபாய் கடனுதவித் திட்டம் வரப்பிரசாதமாக இருக்கும் என்கின்றனர் அந்தத் தொழிலாளர்கள்.

இந்தப் படகு இல்லங்களின் வழியே தினமும் மூன்று முதல் நான்கு கோடி ரூபாய் வரை வணிகம் நடந்து வந்தது. இதேபோல் வயநாடு, தேக்கடி, மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா சார்புத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். கேரள அரசின் சுற்றுலாத் துறை புள்ளிவிவரங்களின்படி கடந்த ஆண்டில் (2019) கேரளத்துக்கு வந்த மொத்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 1.96 கோடி ஆகும். அவர்களில் 1 கோடியே 84 லட்சம்பேர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 12 லட்சம்பேர் வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் ஆவார்கள்.

இவர்களின் மூலம் கடந்த ஆண்டு கேரள அரசு 45 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருந்தது. இந்த வருமானத்தில் பெரும்பகுதி கோடைவிடுமுறைக் காலமான ஏப்ரல், மே மாதங்களில்தான் கிடைத்தது. இந்தமுறை கரோனாவால் முக்கிய சீசனையும் அதன் பின்பும் சுற்றுலா வருமானத்தை முற்றாக இழந்திருக்கிறது கேரளம். இதனால் கேரள மாநில சுற்றுலாத்துறைக்கு 25 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி வரையிலும் அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கேரளம் வருவது வழக்கம். அதற்குள்ளாவது கரோனா அச்சம் முற்றாக ஒழியுமா என ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் கேரள சுற்றுலாத் துறை சார்ந்த தொழிலாளர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x